
posted 30th September 2022
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்துக்கான விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (29.09.2022) யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இளைஞர் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய முன்னேற்பாடு திட்டமான ஆரஸ்சாவ சுரக்கும திட்டத்தின் ஆரஸ்சாவ திட்டத்தில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கான ஓய்வூதியத் தொகையின் பெறுமதியின் அடிப்படையில் புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை 100 வீதம் பூர்த்தி செய்தமைக்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ. ஸ்டான்லி டீமெல் அவர்களுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதே போன்று பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட இலக்குகளை தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்து கொண்ட பிரதேச செயலகமாக நானாட்டான் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அப்பிரதேச செயலகத்துக்கான தேசிய விருதும் (2021) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று 2019ஆம் ஆண்டு தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்த பிரதேச செயலகமாக மன்னார் நகர பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான தேசிய விருதும் முன்னாள் பிரதேச செயலாளருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)