தேசிய பேரவையின் தீர்மானம்

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைப்பதற்கு தேசிய பேரவை தீர்மானித்துள்ளது.

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் வியாழக்கிழமை (29)
நடைபெற்றது. பேரவையின் தலைவரும் சபாநாயகருமான மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், உருவாக்கப்பட்ட உப குழுக்கள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானித்தல், பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவதல் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சகல பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் தேசிய பேரவையை கூட்டுவது என்று முடிவு எட்டப்பட்டது.

பேரவை கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தேசிய ரீதியில், பாராளுமன்றத்தின் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பொது மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் காணப்படும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் திறக்கப்பட்ட புதியதொரு கதவாக இது அமையும் என்றார்.

பேரவை கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் கொறடா லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டைமான், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, சிசிர ஜயகொடி, அசங்க நவரத்ன, ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்த்தன, வஜிர அபேவர்தன, சம்பிக ரணவக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேசிய பேரவையின் தீர்மானம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)