
posted 27th September 2022

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் - வவுனியா - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
*தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திங்கள் அனுஷ்டிக்கபட்டது.
அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி,ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் - வர்ணம் தீட்டும் போட்டி
யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் திலீபன் உருவப்படத்துக்கு வர்ணம் தீட்டும் போட்டி இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் பல சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் தியாக தீபம் திலீபனின் அச்சுப்பதிக்கப்பட்ட உருவத்துக்கு சிறார்கள் வர்ணம் தீட்டினர்.
மேற்படி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தியாகி திலீபன் மறைந்த நாளான நேற்று பரிசில்கள் வழங்கப்பட்டன.

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் திங்கள் (26) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட்டது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு உடையார் கட்டு நகரில் அமைக்கப்பட்ட விசேட கொட்டகையில் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் - ஊர்தி பவனி
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படும் ஊர்தி பவனியானது யாழ். மாவட்டத்துக்குள் வந்தடைந்ததுடன் சனிக்கிழமை (24) வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கியவாறு பருத்தித்துறை நகருக்குள் சனி (24) காலை பயணித்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை வந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY