
posted 6th September 2022
தாதிய சேவையில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களை விசேட தகுதிகாண் பரீட்சை மூலம் - குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்களை மருத்துவமானிப் பட்டப்படிப்புக்கு உள்வாங்கும் செயல் திட்டத்தை உருவாக்குதல் அவசியம் - என்று யாழ். போதனா மருத்துமவனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில்
கொரோனாப் பெருந் தொற்றும் அதன் பின்னரான உலக பொருளாதார நெருக்கடியும் மருத்துவ சேவையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது. இதனால் மருத்துவர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் அளவு குறைவாகவும் பெருமளவான மருத்துவர்கள் அதிக வருமானம் கிடைப்பதற்காக புலம் பெயரும் வீதமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறும் மருத்துவர்களின் வயதெல்லையை நீடிப்பதனால் நீண்ட தீர்வு கிடைக்காது. மாறாக இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ளது போல் தாதிய சேவையில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களை - குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் சிகிச்சைப் பிரிவு என்பவற்றில் அனுபவம் உள்ளவர்களை விசேட தகுதிகாண் பரீட்சை மூலம் குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்களை மருத்துவமானிப் பட்டப்படிப்புக்கு உள்வாங்கும் செயல் திட்டத்தை உருவாக்குதல் அவசியம்.
இதனால் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடிய மருத்துவ ஆளணிப் பிரச்னையை இலகுவாகக் கையாளலாம். இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படவுள்ளது. எனவே, இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சாதகமான முடிவை எடுத்தல் அவசியம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)