
posted 3rd September 2022
மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரத்தம் தேவைப்படுவதாக அண்மையில் மன்னார் வைத்தியசாலை பணிப்பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி தனோஷ் பெர்னாண்டோ அவர்கள் இரத்ததானம் தொடர்பாக பேசாலை 542 இராணுவ முகாம் அதிகாரியை நாடியிருந்தார்.
இதற்கமைய பேசாலை இராணுவ முகாமைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினரும் மற்றும் பொது மக்களும் 80 பேர் இரத்ததானம் வழங்கும் முகாமில் இரத்தம் வழங்கினர்.
தலைமன்னார் வைத்தியசாலையில் சனிக்கிழமை (03.09.2022) இரத்தானம் வழங்கும் முகாம் இடம்பெற்றது.
தலைமன்னார் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் மன்னார் 306பி லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இம் முகாம் இடம்பெற்றது.
இங்கு பெறப்பட்ட இரத்தம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் இரத்தானம் வழங்கும் நிகழ்வில் வைத்திய கலாநிதிகள், தலைமன்னார் வைத்தியசாலை பொறுப்பதிகாரி தனோஷ் பெனாண்டோ, மன்னார் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டெனி மற்றும் மு. கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)