
posted 21st September 2022
அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவை பிரிவினரால் தராசுகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அனைத்து வியாபாரிகளும் தமது தராசுகளை பரிசோதனைக்குட்படுத்தி, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட செயலகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் செவ்வாய்க் கிழமை (20) ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்பாடு வெள்ளிக்கிழமை (23) வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது இலத்திரனியல் தராசுகள், பாரம்பரிய தராசுகள் மற்றும் நிறுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவீட்டுடன் கூடிய தராசுகள் சரி பார்க்கப்பட்டு, சீல் செய்யப்பட்டு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் இப்பிரதேச வர்த்தகர்கள், மீனவர்கள் பலர் தத்தமது அளவீட்டு தராசுகளை கொண்டு வந்து, பரிசோதனைக்குட்படுத்தி தரச் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
எனினும் தராசுகளை பரிசோதனைக்குட்படுத்தி, சான்றிதழ் பெறாத பல வியாபாரிகளின் மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதனால் அனைத்து வியாபாரிகளும் இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலகத்தினால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)