தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியது காலத்தால் அழியாத வடு

ராஜபக்ச ஆட்சி காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்குவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை 18 முறை சுற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றிய வரலாறு நாமல் ராஜபக்ச மறந்திருக்க மாட்டார். அப்படியிருந்தும் தமிழர் பிரச்சனை தொடர்பாக நாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

குகதாஸ் விடுத்திருக்கும் ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது;

நாமல் ராஜபக்ச ஊடகத்துக்கு தெரிவிக்கப்பட்ட விடயம் குறிப்பாக ராஜபக்சவின் ஆட்சி காலத்தின்போது தமிழ் மக்களுக்கான தீர்வை தாங்கள் கொடுப்பதற்கு முன்வந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் சுய இலாப அரசியல் நோக்கில் அவற்றை தட்டிக் கழித்ததாக நாமல் ஒரு குற்றச் சாட்டை முன்வைத்திருந்தார்.

உண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2010 தொடக்கம் 2015 வரையான ஆட்சி காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்குவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை 18 முறை சுற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றிய வரலாறு நாமல் ராஜபக்ச மறந்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிந்திருந்தும் ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். குறிப்பாக நாமல் ராஜபக்ச அவர்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பிற்பாடு கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின் குறிப்பிட்டது தமிழ் மக்களுக்கு இங்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் பொருளாதார பிரச்சனை மட்டுமே என்று.

இதன் அடிப்படையில் அவரின் முன் நகர்வு இறுதியில் நாடு பூராகவும் பொருளாதார பின்னடைவை சந்தித்து உள்ளது.

இதனால் இவர்களுக்கு வாக்களித்த சிங்கள மக்களே விரட்டி அடித்த சம்பவத்தை நாமல் மறந்துள்ளார் போல என நாங்கள் நினைக்க வேண்டியுள்ளது.

உண்மையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் ராஜபக்ச அரசு ஒரு போதும் நினைக்கவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச தான் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என 2011 தொடக்கம் 2015 வரை உள்ள ஆட்சி காலத்தில் அரசியல் அமைப்பில் 18 வது திருத்தம் ஒன்றை கொண்டு வந்தார்.

அதில் ஒரு ஜனாதிபதி இரண்டு முறை அல்ல பல தடவைகள் ஆட்சியில் இருக்கலாம் என திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு இழைத்த குரோதம் அநியாயத்தின் காரணமாக 2015 ஆம் ஆண்டு அவர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார்.

ராஜபக்சவின் தொடர் கனவு தோல்வியில் அமைந்தது. இதன் அடிப்படையின் வெளிப்பாடு நாமல் ராஜபக்ச இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதன் காரணமாக இருக்கின்றது.

ஆகவே, இவர்கள் தொடர்ந்து ஏமாற்று வேலைகளை தொடர்ந்தால் சிங்கள மக்களால் விரட்டப்படும் நிலமை எதிர்காலத்தில் உருவாகும். ஆகவே, நாமல் ராஜபக்ச அவர்கள் இவ்வாறான பொய் கற்றச்சாட்டை சுமத்துவதை இனியும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றேன் என சபா குகதாஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியது காலத்தால் அழியாத வடு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)