
posted 9th September 2022
உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதின் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோ. கருணாகரம் (ஜனா) வல்வெட்டித்துறை நகர சபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்ற தலைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் மயூரன், தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்கத் தவறிமை தொடர்பில் இக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடித விபரம்:
திரு. மாவை சேனாதிராஜா, மு. பா. உ,
தலைவர்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி,
மாவிட்டபுரம்,
யாழ்ப்பாணம்.
ஐயா,
வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
திரு. மயூரன்
வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த முறை நகர சபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரின் மரணத்தினாலே ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கே இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள் கட்சி உறுப்பினர் மயூரன் அவர்களுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் பதவி ரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது. ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா அவர்கள் மரணித்த பின்பு தவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டது.
23-08-2022 அன்று நடந்து முடிந்த வல்வெட்டித் துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்த நிலையில் தங்களால் நியமிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட நபர் தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலே வெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.
ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டது என்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம்,
1. அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும்,
2. அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும்
எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.
எதிர்காலத்தில் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும், சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமைபோல கருதுகின்றது.
ஏனைய பல உள்ளுராட்சி மன்றங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்பு முடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்றுவரை செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். விரைவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கும்.
கோவிந்தன் கருணாகரம் பா.உ.
செயலாளர் நாயகம்,
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)