
posted 20th September 2022
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் அபகரிப்பு உடன் நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் கடந்த வாரம் முதல் தொல்பொருள் திணைக்களத்தினர் அபகரிக்கும் நோக்குடன் எல்லையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக அவ் வாழ் மக்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு உடன் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு உடனடியாக விஜயத்தை மேற்கொண்டு பாதிப்படைந்த மக்களிடம் இது தொடர்பான பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் சம்பவ இடங்களையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவுடன் அவ்விடத்திலிருந்தே தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடித்தனத்தை சுட்டிக்காட்டிய போது, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றம் வருகின்ற போது தன்னை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதுக்கு அமைய சாள்ஸ் நிர்மலநாதன் சம்பந்தப்பட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை இன்று செவ்வாய் கிழமை (20.09.2022) பாராளுமன்ற கட்டிடத்தில் நேரில் சந்தித்து விவசாய காணி அபகரிப்பு தொடர்பாக உரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் கலந்து கொண்டார்.
இச் சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் உடனடியாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு உடனடியாக இவ் அளவீடுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)