தப்பிக்க முடியாது – ரவூப் ஹக்கீம்

“ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் இடம்பெற்றுவரும் இதேவேளை முள்ளிவாய்க்கால் யுத்தக் குற்றங்களுடன், பொருளாதார நெருக்கடிக்கான மோசடி குற்றச்சாட்டும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புபட்ட முன்னைய அரசும் இராஜபக்ஷக்களும் இலகுவில் தப்பிக்க முடியாது”

இவ்வாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

அக்கரைப்பற்றில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அக்கரைப்பற்று அய்னாஹ் கடற்கரை மண்டப மர்ஹஹும் எம்.ஐ.எம். முகைடீன் அரங்கில், “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்து பிரபல கவிஞரும், நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா மர்ஹும் அஷ்ரப் பற்றிய நினைவுப் பேருரையையும் ஆற்றினார்.

அத்துடன் “முஸ்லிம் காங்கிரசும் சமகால அரசியலும்” எனும் தலைப்பில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான “முழக்கம்” ஏ.எல். அப்துல் மஜீத் சிறப்புரையும் ஆற்றினார்.

தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இலங்கை மீதான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுவருகின்றன.

ஏற்கனவே கடந்த அரசுகாலத்திலான யுத்தக் குற்றச் சாட்டுக்களுடன் புதிதாக திருத்தம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்ததை நெருக்கடிக்குள்ளாக்கிய மோசடி தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மீதான குற்றச்சாட்டில் புதிதாக குறித்த பொருளாதார பாதிப்பு எனும் குற்றச் சாட்டையும் இணைத்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது.

எனவே, இலகுவில் இவற்றுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் தப்பிக்க முடியாதவாறு குற்ற விசாரணைக்கான முஸ்தீபுகள் இடம்பெறவுள்ளன.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்தியாவும் வலியுறுத்திவரும் நிலையில், இலங்கை அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் மொட்டுக் கட்சிகாரர்களின் பேச்சாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு திருத்தம், சர்வசன வாக்கெடுப்பு எனபன பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் சிறையிலடைத்து அச்சமூட்டுவது போல், அவரால் எம்மை ஒருபோதும் அச்சமூட்ட முடியாது. எமது சுயாதீனம், ஜனநாயக செயற்பாடுகள் வலுவானது.

இன்று போட்டி அரசியலின் வெளிப்பாடாகவும், விருப்பு வாக்கு அரசியலாலும் பல விபரீதங்களேற்பட்டுள்ளன.

இந்த வகையில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காட்டிய வழியில், அவருடைய சமூகம் சார்ந்த இலட்சியக் கனவுகளை நோக்கிய இலக்கை நோக்கி முஸ்லிம் காங்கிரஸின் பயணம் தொடர்கின்றது.

இந்தப் பயணம் கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருபதால், பல சந்தரப்பங்களில் தலைமை குருடனாகவும், செவிடனாகவும், ஏன் ஊமையாகவும் இருந்து கொண்டு கட்டம், கட்டமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முயற்சிக்கின்றது.

கட்சியின் தீர்மானங்கள், கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவளித்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சிப் போராளிகளுட்பட ஆதரவாளர்களும் சிலாகித்த வண்ணமுள்ளனர்.

கோட்டா ஆட்சி நிலைக்காது என்று கூறிவந்தோம். மீறி ஆதரவளித்த எம்மவர்கள் இன்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

அதிலும் ஒருவர் அமைச்சுப் பதவியையே பெற்று, கட்சியை மீறி பீடாம்பரமாக உலாவருகின்றார். இவர் தொடர்பில் கட்சிவாளாதிருக்காது, கேவலம், இவர் ஜனாதிபதியின் கடிதத்தைக் கொடுப்பதற்காக சவுதி இளவரசர் சல்மானைச் சந்திக்கச் சென்றவர். ஒரு துணை அமைச்சரிடமே கடிதத்தைக் கொடுத்துவிட்டு திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இத்தகைய நிலையிலும் எம் தலைவர் மர்ஹும் அஷ்ரபை நினைவு கூர்வதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
ஊர்வாதம், பிரதேசவாதங்களுக்கு அப்பால் எம்மை வழிகாட்டிய மறைந்த தலைவர் அஷ்ரப், நிறைய முரண்பாடுகளுக்கு அப்பாலும் தமிழ் பேசும் இனங்களின் ஒற்றுமைக்கான முதன்மை சித்தாந்தத்தைக் கொண்டிருந்தார்.

துரோகங்கள், பிரச்சினைகளை மறந்து கட்சியை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எவ்வித பிரச்சினையுமில்லை” என்றார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரும் உரையாற்றினார்.

தப்பிக்க முடியாது – ரவூப் ஹக்கீம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY