
posted 13th September 2022
கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்ற முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
- இப்பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையம் ஒன்றினை நடத்துவதாயின் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை மாநகர சபை வெளியிட்டியிருப்பதுடன் இவ்விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வியாபார உத்தரவுப் பத்திர அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
- தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடல் அனர்த்த பாதுகாப்பு எல்லையிலிருந்து 100 மீற்றருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருப்பதோடு, அனர்த்தங்கள் ஏற்படும்போது மாணவர்கள் இலகுவாக வெளியேறக்கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- இங்கு பிரத்தியேக வகுப்புக்கள் காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரையும் பிற்பகல் 3.15 மணி முதல் பிற்பகல் 6.15 மணி வரையுமே நடாத்தப்பட வேண்டும்.
- வகுப்புக்கள் நடாத்தப்படுகின்ற கட்டடத்தின் கூரையானது ஓடு வேயப்பட்டதாகவும், வெப்பமேற்றலை தவிர்க்கக் கூடிய அமைப்பில் அமைந்திருத்தல் வேண்டும். குறித்த கட்டடம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக திறந்த காற்றோட்டம் உள்ளதாக அமைந்திருத்தல் வேண்டும்.
- கதிரை, மேசைகள் வயது வித்தியாசத்திற்கு ஏற்ப சொகுசானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். ஆண், பெண் இருபாலாருக்குமுரிய மலசலகூட வசதிகள் வெவ்வேறாக அமையப் பெற்றிருத்தல் வேண்டும். மலசல கூட வசதியானது 25 மாணவர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- தேவை ஏற்படின், கொவிட்-19, மற்றும் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உட்புறமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளையும், அதன் கீழான வர்த்தமானி அறிவித்தல்களையும், சுகாதார விதிகளையும் அதனோடு தொடர்புபட்ட உப விதிகளையும் பின்பற்றல் வேண்டும்.
- மாணவர்களுடைய வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகளை பாதையோரங்களில் நிறுத்தி வைத்து பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது. தேவை ஏற்படின் தங்களுடைய வளாகத்தினுள்ளேயே வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும். அத்துடன் அயலவர்களுக்கு இடையூறாக அமையக்கூடாது.
- பாடசாலையில் பரீட்சை மற்றும் தவனை விடுமுறை வழங்கப்பட்டு, கட்டாயம் ஆகக் குறைந்தது ஒரு வாரகாலத்திற்கு பின்னரே தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மாதத்தில் வரும் எந்தவொரு பொது விடுமுறை தினத்திலும், வெள்ளிக் கிழமை பிற்பகல் வேளைகளிலும் வகுப்புக்களை நடாத்துவது கூடாது.
- ஒரு பாடம் ஆகக்குறைந்தது 50 நிமிடங்களுக்கு குறையாதவாறு நடாத்தப்பட வேண்டும். 50 நிமிடங்களுக்கு குறையாதவாறு நடாத்தப்படும்
- ஒரு பாட வேளைக்காக கட்டணம் தரம் 01 முதல் தரம் 05 வரையான வகுப்புக்களுக்கு ஆகக்கூடியது 40 ரூபாவும், தரம் 06 முதல் க.பொ.சா தரம் வரையான வகுப்புக்களுக்கு 50 ரூபாவும், க.பொ. உயர்தர வகுப்புக்களுக்கு 80 ரூபாவுமே அறவிடப்பட வேண்டும். அத்துடன் மாணவர்களிடம் சேர்வுக் கட்டணம் அறவிடப்படக் கூடாது.
- கற்பிக்கின்ற பாடங்களின் நேர அட்டவணைகள், ஆசிரியர்களின் விபரங்கள் என்பன உறுதிப்படுத்தப்பட்டு கல்முனை மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந் நிபந்தனைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என முதல்வர் ஏ.எம். றகீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)