தடைப்பட்டியலில் இருந்து அப்பாவிகளை நீக்குங்கள் - ரவூப் ஹக்கீம்

"தடைப் பட்டியலில் உள்ளவர்களைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அழுத்தம் கொடுத்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ள அறிக்கையில் குற்ற ஒப்புதல் தருமாறு தாம் கேட்டதாக உரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதும் அதனை உறுதிப்படுத்துகிறது.அவ்வாறான அப்பாவிகளை தடைப்பட்டியலில் இருந்து நீக்குங்கள்"

இவ்வாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்றத்தில் இரண்டாம் நாள் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதே போன்று, தடைப் பட்டியலில் அதிகமான அப்பாவி மாணவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். அதனை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியதாவது,

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிடும்போது, முழுமையான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அத்திவாரமாக இருப்பதற்கு இதனூடாக முயற்சித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2023ஆம ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர் விரிவாக விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அவர் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் கூறிய ஒரு வாசகம் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுது அவர் ”நான் ஓர் இரவு நேரக் காவலாளி” என்றார். அதாவது கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை அந்தி சாயும் வேளையில் மங்கலான வெளிச்சத்தில் அடுத்த நாள் ஆட்டத்தைத் தொடரும்வரை தக்க வைத்துக் கொள்வதற்கு அணியில் பலவீனமான ஒருவரை ஆடு களத்தில் இறக்குவது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்படுபவர் சிலவேளைகளில் நூறு ஓட்டங்களைக் கூட எடுத்த வரலாறும் உண்டு. லலித் கலுப்பெரும என்ற சுழல்பந்து வீச்சாளர் அவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டியவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவ்வாறுதான் ஜனாதிபதியாக இருக்கும் இவரும் "இரவு காவலாளி” கோலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவிக்க எத்தனிப்பதான தோற்றப்பாட்டை காண்பிக்க எத்தனித்து வருகின்றார்.

அதே போன்று இப்பொழுது வணிப மயப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டில் T-20யில் ஐ பி எல் போன்று ஒரு வகையான வணிகம் தலைதூக்குவதாகக் கருதப்படுகின்கிறது. அவ்வாறுதான் இந்த ஜனாதிபதியும் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆடுகளத்தில் குதித்த கெப்டனாக தென்படுகிறார். அதன்படி அவர் ராஜபக்ஷ குடும்பத்தின் இரட்சிப்பாளராகத் தொடர்ந்தும் இருக்க விரும்புகிறாரா அல்லது யதார்த்தமான விதத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கப் போகின்றாரா என்பதில் ஏதாவதொன்றை அவர் நிரூபிக்க வேண்டும்.

பயங்கரவாத சட்டம் 1978ஆம் ஆண்டில் ஒரு தற்காலிகமான சட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. காலாகாலமாக யாராவது ஒருவர் ஏதாவதொரு காரியத்திற்கு குற்றஞ் சாட்டப்பட்டால் அத்தகையோருக்கு உரிய காப்பீடாக அமையும் பல்வேறு சட்டங்கள் நடைமுறையிலிருக்கத்தக்கனவாக, அவற்றிக்கு முற்றிலும் மாற்றமாக, ஏனைய சட்டங்களை ஓரங்கட்டிப் புறந்தள்ளிவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து தொடர்ந்தும் அப்பாவி மாணவர்களையும், நிரபராதிகளையும் கைது செய்து தண்டித்து வருகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதி எதிர்பார்க்கும் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பாரிய சவாலாக அமையும். இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டி விரட்டித் தாக்குதல் நடத்தியும், அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்கும் தீர்மானத்துக்கு கையெழுத்திடுவதும் சவாலுக்குரியவை.

"நீங்கள் சர்வதேசத்துக்கு வழங்கும் செய்தி இதுவா?" என்று கேட்க விரும்புகின்றேன். ஜனாதிபதி தனது இந்தப் போக்கை மாற்றியமைத்து இந்த விடயத்தை மீளாய்வு செய்து வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என நினைக்கின்றேன்.

இதேவேளை, சில நபர்கள் தடைப்பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்வியொன்றிற்கு பதிலாகவும் அது அமைந்துள்ளது. அதில் 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐ.நா. அறிக்கைக்கு அமைவாக, சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் 216 நபர்களும், 6 அமைப்புக்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் பட்டியலில் உள்ள 156 முஸ்லிம்களினதும், 6 முஸ்லிம் அமைப்புகளினதும் நிலை என்ன? சஹ்ரானின் 4 அமைப்புகளைப்பற்றி நான் கூற வரவில்லை. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பாவி முஸ்லிம் நபர்கள் மற்றும் மாணவர்கள் விஷயத்தில் அதே நடைமுறை கையாளப்பட்டதா? அவ்வாறான நடவடிக்கைகள் சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்றனவா? நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு இதுதொடர்பாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். அத்துடன் இந்த தடைப்பட்டியலில் உள்ளவர்களைப் பயங்கரவாத விசாரணை பிரிவினர், வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து, குற்றஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மனிதஉரிமை ஆணைக் குழுவிற்கு வழங்கியுள்ள அறிக்கையிலும் குற்ற ஒப்புதல் தருமாறு தாம் கேட்டுக் கொண்டதையும் உரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதனால் அப்பாவிகளை பிரஸ்தாபத் தடைப்பட்டியலில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் எழுதியதையும் ஹன்சார்டில் இடம்பெறச் செய்வதற்காக சபையில் சமர்ப்பிக்கிறேன்.

அத்துடன், உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக சமயத் தலங்களில் 180 அலகுகளுக்கு மேல் பாவித்தால் தற்போதுள்ள கட்டணத்தைவிட ஏறத்தாழ 700 வீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

தடைப்பட்டியலில் இருந்து அப்பாவிகளை நீக்குங்கள் - ரவூப் ஹக்கீம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)