சைவத் தமிழர்களின் சொத்து ஆக்கிரமிக்கப்படுவதை ஒன்றுகூடித் தடுப்போம்

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்று கூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

இந்த சந்திப்பில் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தாரத்தன், சி. சிறீதரன் போன்றோரும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்தவர்கள் திருக்கோணேஸ்வரம் சைவத் தமிழர்களின் சொத்து என்றும், இதைப் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள் உட்பட சைவ அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற வளாகத்தில் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆலயம் ஆக்கிரமிக்கப்படுவதை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

சைவத் தமிழர்களின் சொத்து ஆக்கிரமிக்கப்படுவதை ஒன்றுகூடித் தடுப்போம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)