
posted 23rd September 2022
தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களம் திருக்கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய விடயம் தொடர்பிலான ஒத்துவைப்புப் பிரேரணை மீததான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கோணேஸ்வரர் ஆலயத்தின் புகழை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பல புராணங்கள் போற்றியுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் தட்சண கைலாய புராணமாகும். இலங்காபுரியை ஆண்ட இராணவனால் வழிபட்ட இவ்வாலயத்தின் பெருமையை திருஞானசம்மந்தர் பதிகம் மூலம் பாடியுள்ளார். பல்லவ, சோழர் கால கல்வெட்டுக்கள் பலவற்றில் இதன் பெருமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
1624ம் ஆண்டு போர்த்துக்கேயர் திருகோணமலையிலே ஆட்சி செய்த காலம் இந்தக் கோயிலை உடைத்து அதன் செல்வங்களை அள்ளிச் சென்றது மாத்திரமல்லாமல், அந்தக் கோயிலை உடைத்த கற்களைக் கொண்டுதான் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர் கூறிய பிறட்ரிக் கோட்டை என்பது உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் 1952லே மூன்று மதஸ்தலங்களிலே அதுவும் ஒன்று என்று கூறுகின்றார்.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திருக்கோணேஸ்வரத்தைப் புனித நகராக மாற்ற வேண்டும் என்று இந்துக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 1965ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒரு நல்லிணக்கத்தை இந்த நாட்டு அரசுடன் ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும் என ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்தார்கள். திருச்செல்வம் அவர்கள் உள்ளுராட்சி அமைச்சராக இருந்தார். அவர் திருகோணமலை நகரைப் புனித பூமியாக மாற்ற வேண்டும் என்ற பிரேரணை கொண்டு வந்திருந்தார். டட்லி சேனநாயக்காவும் அதற்கு அனுசரணை கொடுத்திருந்தார். ஆனால் விகாராதிபதிகளின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் திருச்செல்வத்திற்கே தெரியாமல் அந்த ஆணைக்குழுவை நிராகரித்தமையால் திருச்செல்வம் அவர்கள் அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இருந்தாலும் 2018ம் அண்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தலே அரச அதிபர் அங்குள்ள நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னலையிலே முடிவு எட்டப்படடது. அங்கு கடைகள் வைத்திருந்த 45 பேரும் அமைச்சர் சொல்வது போன்று அந்தக் கோயிலையோ, அப்பிரதேசத்தையோ சுற்றியிருந்தவர்கள் அல்ல. அன்று இரத்தினபுரியிலே இருந்து திருகோணமலைக்கு வந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புஞ்சிநிலமே அவர்கள் தன்னுடைய பிரதேசத்தில இருந்தும், தம்புள்ளை, குருநாகல், பொலநறுவை போன்ற பிரதேசங்களில் இருந்தும் தன்னடைய தேர்தல் அடாவடி வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் தான் அங்கு குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதரத்திற்காக அந்தக் கோயில் பிரதேசத்திலே தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதை இந்தச் சபை தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் கோயில் நிருவாகம் மனச்சாட்சியுடன் நடந்து கொள்கின்றார்கள். என்னவென்றால், 2018ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், தொல்பொருள் திணைக்களம் என்பது இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் திருகோணமலையில், கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருளை பாதுகாக்க வேண்டிய திணைக்களம் அவ்விடத்தில் வேற்று மதத்தவர்களை, இனத்தவர்களை அந்தக் கோயிலையே வழிபடாதவர்ககளைக் கொண்டு வந்து தொல்பொருள் திணைக்களம் என்கின்ற போர்வையில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கோயில் நிருவாகத்தினரை ஆலோசனை பெறுவதற்காகக் கூப்பிடவில்லை, அறிவுறுத்தல் தருவதற்காகவே அழைத்துள்ளோம். நாங்கள் அவர்களுக்கு நிரந்தரமான கடைகள் அமைத்துக் கொடுக்கப் போகின்றோம் என ஆளுநரும், தொல்பொருள் அதிகாரியும் கூறியுள்ளார்கள். ஆனால், அந்தக் கடைகளின் வடிவங்களைப் பார்க்கும் போது அந்தக் கடைகள் கடைகளாக இல்லை, அவை குடியேற்ற வீடுகளாகவே இருக்கின்றன. எனவே, கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தின் நியாயத் தன்மையைப் புரிந்துகொண்டு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்திற்கென ஒரு தொல்பொருள் செயலணியை இதற்கு முன்பிருந்த ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் அமைத்திருந்தார். முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண தலைமையில் முழுக்க முழுக்க சிங்கள அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் கொண்ட ஒரு செயலணியாக அது அமைக்கப்பட்டது. இன்று திருகோணமலை திருக்கோணேஸ்வரத்திலே சிங்களம் மட்டும் பேசக் கூடிய பல்கலைக்கழக மாணவர்களினாலேயே அந்தப் பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கின்றது. ஏன் இந்த நாட்டிலே தொல்பொருளுடன் தொடர்புடைய ஏனைய மதத்தவர்கள் இல்லையா? கிழக்கு மாகாணத்திற்கென நூறு வீதம் சிங்களவர்களினால் மாத்திரம் உருவாக்கப்பட்ட செயலணியும், தொல்பொருள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களும் எதனைச் செய்ய முனைகின்றார்கள்?
கிழக்கு மாகாணத்திலே சிங்களப் புராதனச் சின்னங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றார்களா? ஏனைய மதத்தவர்களும் அந்தச் செயலணிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தச் செயலணி கலைக்கப்பட வேண்டும். அந்தச் செயலணிக்குள் ஏனைய மதத்தவர்களோ, ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர் குழாமிற்குள் ஏனைய மத மாணவர்களோ உள்வாங்கப்பட்டால் அங்கிருப்பது எந்த மதத்தைச் சார்ந்த, எந்த மதத்தினர் வழிபட்ட புராதனப் பொருட்கள் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புகின்றோம். நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தமிழருக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம், நீங்கள் குறிப்பிட்ட தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், கடந்த அமைச்சரவையிலே இருந்த இனவாதிகளுள் முக்கியமான இனவாதி நீங்களாகவே இருப்பீர்கள்.
இந்த நாட்டை அழித்த சில இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக கே.எம்.பி. ராஜரெட்ண, ஆர்ஜி. சேனநாயக்க, சிறிலால் மத்தியு போன்ற மூன்று மிகவும் துவேசமான இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மூன்று இனவாதிகளையும் ஒன்று திரட்டி ஒரே ஆளாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் தற்போது பேசும் போது சுற்றிவர இருந்தவர்களுக்கு முன்னுரிமை, நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே நடைபெற்றவைகளுக்கு நீங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றீர்கள்.
எனவே, தொடர்புடைய அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஏழாம் நூற்றாண்டிலே பாடல் பெற்ற இந்தத் திருக்கோணேஸ்வரம் முன்னூற்று நாற்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்டதை 1971ம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், பதினெட்டு ஏக்கருக்கு உட்பட்ட காணி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கின்றது. அந்தக் கோயில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாடல் பெற்ற தளம் இராஜகோபுரம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கான இராஜகோபுரம் அமைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் இந்த நாட்டைப் பற்றிப் படித்து விட்டுத்தான் வருகின்றார்கள். இந்த நாட்டிலே சோழர், பல்லவ காலத்து ஆட்சியைப் பற்றி அறிந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அவர்கள் திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லும் போது வழியிலே கடைகளை வைத்து இந்து சமயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிபடுவதற்கும், ஆராய்வதற்கும், சுற்றலாப் பயணிகள் மேலும், மேலும் வருவதற்கும் ஆவனசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY