சர்வதேச விசாரணையில் புலம்பெயர் தமிழர்கள்  உறுதியாக இருக்க வேண்டும் - சபா குகதாஸ்

இலங்கை அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கும், அதன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கும் அமைவாகவே விசாரிக்கப்பட வேண்டும். இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும். மாறாக, குற்றம் இழைத்த தரப்பான இலங்கையை உள்ளக விசாரணையில் விசாரித்தல் என்பது பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் செயல் ஆகும்.

சர்வதேச நியமங்களுக்கு அமைவான குற்றங்களை அதற்கான சட்டங்கள் இல்லாத நீதித்துறைக் கொண்ட இலங்கையின் நீதித் துறையில் விசாரித்தல் என்பது நீதியானது அல்ல. அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே தாங்களை தாங்கள் விசாரித்தல் உலக ஒழுங்கில் மிகவும் வேடிக்கையான விடையம்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவும், மீள் நிகழாமையை உறுதி செய்யவும், பரிகார நீதியை பாதிக்கப்பட்ட இனம் பெற்றுக் கொள்ளவும், மிகப் பொருத்தமான பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணைப் பொறிமுறையே ஏற்புடையது .

ஆகவே, பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்த தாயக புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை மனிதவுரிமைப் பேரவையில் அங்கம் பெறும் கோ குறூப் நாடுகளின் பிரதி நிதிகளிடமும், அதனை வழி நடத்தும் நாடுகளிடமும், முன் வைத்து ஒரே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் .

உள்ளக நீதி விசாரணை என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் தொடர்ந்து தமிழர் தரப்பு உறுதி செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதுவே சர்வதேச நீதிக்கான கதவுகளைத் திறக்கும்.

சர்வதேச விசாரணையில் புலம்பெயர் தமிழர்கள்  உறுதியாக இருக்க வேண்டும் - சபா குகதாஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)