சரித்திரம் சொல்லும் எம் தாய்நில ஆக்கிரமிப்பு நின்றபாடில்லை

நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் வடக்கு கிழக்கில் மீண்டும் மீண்டும் தொல்பொருள் திணைக்கம் என்ற போர்வையில் தமிழரின் பூர்வீக நிலங்களையும், புராதனச் சின்னங்கள் இருக்கும் இடங்களையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடு தொடர்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (20) இடம்பெற்ற தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

உண்மையில் இந்த தேசிய சபை என்ற பெயரளவிலான பாராளுமன்றக் குழு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்திற்கு மேலே அமையவிருப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இந்த நாட்டிலே பல ஆணைக் குழுக்கள் பல சபைகள் அனைத்தும் அமைத்து இன்று தேசிய சபை என்பது இலங்கையின் குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட காலத் தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல் தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி அமைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், தேசிய அரசாங்கம் அமைப்பது, தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்துவது என்பன சம்மந்தமான புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டிலே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கலந்தாலோசனைகள் பல நடத்தி அது நிறைவேறாத காரணத்தினால் இன்று தேசியசபை அமைப்பதற்குப் பிரதமர் முடிவெடுத்திருக்கின்றார்.

தேசிய அரசாங்கம், தேசியசபை போன்றவைகளை நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. உண்மையிலேயே இந்த நாட்டின் கடந்த கால அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தேசிய சபையோ, தேசிய அரசாங்கமோ அல்லது இந்த நாட்டின் ஒட்டுமொத்த அரசியற் கட்சிகளும் சேர்ந்து எமது இனப்பிரச்சனை தொடர்பில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு.

கடந்த காலங்களிலே இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு கட்சி ஆயத்தமாகும் போது மற்றைய கட்சி அதை எதிர்ப்பதுதான் வரலாறாக இருக்கின்றது. உண்மையிலேயே இதய சுத்தியுடன் தேசிய அரசாங்கமொன்று அமைந்திருக்குமானால் அனைத்துக் கட்சிகளும் இணைந்து எமது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர அரசியற் தீர்வைக் கண்டிருக்கலாம்.

இன்று இந்த நாடு பொருளாதார ரீதியாக நலிவுற்று இந்தளவிற்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு முதற் காரணம் இலங்கையின் இனப்பிரச்சனை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளோ, இலங்கையிலுள்ள அரசியற் கட்சிகளோ அல்லது இந்த நாட்டின் ஆட்சியை மாற்றிய அரகல போராட்டத்தில் பங்குபற்றியவர்களோ இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இனப் பிரச்சனையால் தான் இந்தளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கின்றது என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எங்களது இனத்தை ஒடுக்குவதற்காக மாறி மாறி ஆண்ட அரசுகள் போர்த் தளபாடங்களுக்காக கூடுதலான பில்லியன் கணக்கான பணத்தைச் செலவழித்தமையே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இன்று ஐநா சபையிலே ஒவ்வொரு முறையும் மாறி மாறி பிரேரணைகள் வருகின்றன. ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் 51வது சபையிலே இலங்கையில் பொருளாதாரக் குற்றங்களும் நடைபெற்றிருப்பதாகப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி தொடர்பான குற்றங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அதற்கான தண்டனை வழங்கவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்குப் பிற்பாடு புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் டொலர்களைக் கொண்டு வந்து இங்கு முதலிட வேண்டும் என இந்த நாட்டின் அரசாங்கங்களும் ஏனைய கட்சிகளும் வேண்டுகோள் விடுக்கின்றீர்கள். இந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள் என்பதை மறந்து அவர்களிடம் அக்கோரிக்கைகளை முன்வைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் நிலவிய உயிர் அச்சுறுத்தலினாலேயே அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் அபிலாசைகளுடன் கூடிய நிரந்தரமான அரசியற் தீர்வு வந்தாலே ஒழிய புலம்பெயர் தேசத்திலே இருக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிற்கு வந்து முதலிடுவதற்குத் தயாராக இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனைக்கும் பின்பும் இன்றும் கூட ஒரு பக்கம் பொருளாதார ரீதயில் இந்த நாடு நலிவடைந்திருக்க முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே வடக்கு கிழக்கை நீங்கள் மீண்டும் மீண்டும் தொல்பொருள் திணைக்கம் என்ற போர்வையில் எங்களது பூர்வீக நிலங்களையும், எமது புராதனச் சின்னங்கள் இருக்கும் இடங்களையும் ஆக்கிரமிக்கின்றீர்கள்.

இன்ற திருகோணமலையிலே தேவாரப் பாடல் பெற்ற ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணணேஸ்வரம் கோயிலிலே என்ன நடக்கின்றது. 1970, 1980களிலே அந்தக் கோணேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி 340 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதிலே 18 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களம் கோணேஸ்வரத்திலே குடியேற்றங்களைச் செய்வதற்கு இன்று முற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திருக்கோணேஸ்வரம் என்பது 7ம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பட்ட ஒரு ஈஸ்வரம். 1600களிலே போர்த்துக்கேயர்களால் அந்தக் கோயில் உடைக்கப்பட்டு அங்கு ஒரு கோட்டை அமைக்கப்பட்டது. கோயிலை உடைத்த கற்களினாலேயே அந்தக் கோட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2010ம் ஆண்டு இரத்தினபுரியில் இருந்து வந்த புஞ்சி நிலமே என்ற பிரபல அரசியல்வாதி தனது அரசியலுக்காக அங்கிருந்து கொண்டு வந்த 45க்கு மேற்படட்ட குடும்பங்களை கோணேஸ்வரர் கோயில் அருகே குடியமர்த்தியிருக்கின்றார். இன்று 68 பேருக்கு அங்கு நிரந்தரமாக வீடுகளும், கடைகளும் அமைத்துக் கொடுப்பதற்கு முற்படுகின்றார்கள்.

தொல்பொருள் திணைக்களம் அவர்களுக்கான கடைகளையும் வீடுகளையும் அமைப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். இதே தொல்பொருள் திணைக்கம் இன்று மட்டக்களப்பிலே தாந்தாமலை, குடும்பிமலை, வேலொடுமலை, குசலனார்மலை, அம்பாறையிலே சங்கமன்கண்டி, திருகோணமலையிலே கன்னியா, அகஸ்தியர் போன்ற இடங்களிலே அவற்றுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கே அனுமதி கொடுப்பதில்லை. கோணேஸ்வரர் கோவிலிலே கோபுரம் அமைப்பதற்குக் கூட அனுமதி இல்லை. ஆனால் அதேவேளை அப்பிரதேசத்திலே 68 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளும், அவர்களுக்கான கடைகளும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கோயில் நிருவாகத்தை வற்புறுத்துகின்றார்கள்.

கடந்த பாராளுமன்றததிலே சரத் வீரசேகர அவர்கள் பேசுகையில், இது ஒரு பௌத்த நாடு; பௌத்தத்தைக் காப்பாற்றுவதற்கு எதிராக எவரும் செயற்படக் கூடாது. வெளிநாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அங்கு அவர்கள் காணாமல் சென்று விடுவார்கள் என்று சொல்லியிருந்தார். நான் அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் வடக்கு கிழக்கிலே ஆயிரக்கணக்கான எமது தமிழ் மக்களைக் காணாமல் ஆக்கச் செய்திருந்தீர்கள். இன்று துபாய் எனப்படும் நூறு வீதம் முஸ்லீம்கள் வாழும் அரபு நாட்டிலே சிவன் கோயிலைக கட்டித் திறந்துள்ளார்கள். ஆனால், இங்கு இந்துக்கள், தமிழர்கள் பூர்வீகமாக வாழும் இடங்களில் நீங்கள் சிங்கள மக்களைக் குடியேற்றி எங்கள் சின்னங்களை அழிக்க முற்படுகின்றீர்கள்.

தயவுசெய்து இந்த விடயங்களை நிறுத்தி ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தத் தேசிய சபை முற்படுமாக இருந்தால் அதற்கு ஆதரவு கொடுப்பதற்கு சிந்திப்போம் என்று தெரிவித்தார்.

சரித்திரம் சொல்லும் எம் தாய்நில ஆக்கிரமிப்பு நின்றபாடில்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)