சம்மாந்துறையில் பொலிஸ் தினம்

இலங்கையில் பொலிஸ் சேவையின் 156ஆவது வருட நிறைவு கொண்டாட்டம் தொடர்பான பொலிஸ்தின நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் நடைபெற்ற இந்த பொலிஸ் தின நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பொலிஸ்தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கடமையிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

பொலிஸ் சேவையின் மகத்துவம் மற்றும் பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு தொடர்பிலும், பிரதம அதிதி பிரதேச செயலாளர் ஹனிபா உரையில் வலியுறுத்தினார்.

இதேவேளை பொலிஸ் சேவையின் 156 ஆவது வருட நிறைவு கொண்டாட்ட ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (சனி) நாடளாவிய ரீதியில் சகல பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றதுடன், இரத்ததானம், சிரமதான நிகழ்வுகள், மத நிகழ்வுகள் முதலான பல்வேறு நிகழ்வுகளும் இந்த வாரம் முழுவதும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் பொலிஸ் தினம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)