
posted 20th September 2022
மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அடங்கலாகவுள்ள சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமுர்த்தி 'சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவின் ஒரு கட்டமாக மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் 15.09.2022 அன்று மன்னார் பேசாலை பாடசாலையில் நடைபெற்றது.
மாணவருக்கான கொடுப்பனவு சான்று பத்திரங்களையும், காசோலையினையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட செயலாளருமான திருமதி ஸ்ரான்லி டி மெல் வழங்கினார்.
இக் கொடுப்பனவானது சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உள்ள க. பொ. த. (சா/த)த்தில் 2021-2023 கல்வியாண்டில் சித்தியடைந்து க. பொ. த. (உ/த) கல்வியைத் தொடர்கின்ற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக இச் 'சிப்தொர' புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
இப் புலமைப்பரிசில் நிகழ்ச்சியில், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)