கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினால் வறிய மக்கள் மீது வரிச்சுமை குறையும்

வறிய மக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை திணிக்காமல் நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதன் மூலம் வரிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தேசிய அமைப்பாளர் பி.எம். முஜிபுர் றகுமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஜிபர் றகுமான் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வரிவிதிப்பு முறைமை பலமடங்காக அதிகரித்துள்ளது.

இது நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதாகச் சொல்லி மன்னராட்சிக் காலத்தில் மக்களைக் கொள்ளையடிப்பது போல் வரிவிதித்துள்ளது.

ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைவரையும் சூறையாடுவது போன்றே இத்திட்டம் உள்ளது. எனவே இந்த மனிதாபிமானமற்ற வரி விதிப்பு முறைமையை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புக்கான விலையேற்றம், பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் அப்பாவி மக்களை தண்டித்தல் போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசாங்கம் ஒரு கொடுங்கோல் ஆட்சி போல் வரி வருவாயை ஈட்டி வருகின்றது. தனி மனித முதலாளிகளைப் போன்று அரசு கொடுமையான வரியை விதித்து பொதுமக்களை எல்லையற்ற சுரண்டலுக்கு ஆளாக்கியுள்ளது.

எரிபொருள் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இன்றியமையாப் பங்கு வகித்து வருகிறது.

உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், வித்து வகைகள், காய்கறிகள், பால், பழம், கிழங்கு வகைகள் என்பவற்றின் விலையேற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர;

அதேபோல் பெருமளவு மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கக் கூடிய மருந்து வகைகளும் நாட்டில் இல்லாத நிலமை காணப்படுவதால் மந்தபோஷாக்கான சிறுவர்கள் பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்களும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பும் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு நாட்டில் மனநோயாளிகள் அதிகரிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கென வழங்குகின்ற மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் கடந்த வருடம் விவசாயத்திற்கு உரப் பயன்பாட்டில் ஏற்பட்ட கொள்கை மாற்றத்தினால் நாட்டின் நெல் மற்றும் ஏனைய தானிய உற்பத்தி பாரிய வீழ்ச்சி கண்டது.

அதேபோல் தற்போது நிறைவடைந்த சிறுபோக நெல் மற்றும் தானிய உற்பத்தியும் போதிய உரப் பயன்பாடு இன்மையால் வீழ்ச்சி கண்டது. மீண்டும் பெரும்போக விவசாய காலம் ஆரம்பிக்கின்றது.

இதன்போதாவது விவசாயிகளுக்கு போதிய உரங்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டு மக்களின் உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நம்புகிறது.

எனவே, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.

அதாவது எரிபொருள் விலையேற்றம், அதன்மீது விதிக்கப்படும் அளவிலா வரிவிதிப்பு ஆகியவற்றால் மேற் சொன்ன அனைத்து விடயங்களிலும் விலை ஏற்றம், பொருளாதார நிலையில் ஓரளவு தன்னிறைவு பெற்றோர் வளமான நிலையில் இருப்போருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால், எழை எளிய மக்களின் உணவுப் பொருட்களான அரிசி, மாவு, பருப்பு, காய்கறிகள், பால் போன்றவற்றின் விலைவாசி ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில் மேலும் கடும் வரியுடன் கூடிய எரிபொருள் மின்சாரம், தொலைத்தொடர்பு என்பவற்றின்; விலையேற்றம். அவர்களின் நாள் கூலியைக் கறையான் போன்று அவர்கள் உணராமலே அரித்து, வறியவர்களை நாளாந்தம் வறுமையின் பிடிக்குள் தள்ளிவிடுவதற்கான முறையாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நோக்குகிறது.

எனவே, நாட்டைக் கொள்ளையடித்து, நாட்டை வறுமையிலும், வறுமை நிலைக்குக் கொண்டு சென்றவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு சுகபோக வாழ்க்கையை வழங்குவதை உடனடியாக நிறுத்தி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்கி, மக்களின் வரிச்சுமையை குறைத்து, மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகேள் விடுக்கின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தேசிய அமைப்பாளர் பி.எம். முஜிபுர் றகுமான் தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினால் வறிய மக்கள் மீது வரிச்சுமை குறையும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)