
posted 28th September 2022
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடல் மீன்பிடிக்கான பருவ காலம் ஆரம்பித்துள்ளதால், இந்த கடல் மீன்பிடித் தொழிலுக்கெனத் தொழிலாளர்கள் பெருமளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் வாழும் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமும், கடல் மீன்பிடியும் திகழும் நிலையில் சிறுபோக விவசாய அறுவடை முடிந்து அன்றாட தொழிலாளர்கள் தொழிலின்றி முடங்கியிருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்சமயம் கடல் மீன்பிடிக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ளதால் பெருமளவு தொழிலாளர்கள் கடல் மீன்பிடித் தொழிலை நாடிய வண்ணமுள்ளனர்.
நீண்ட காலத்தின் பின்னர் குறிப்பாக கரைவலை மீன்பிடி இடம்பெறத் தொடங்கியுள்ளதால் தினமும் பெருமளவு தொழிலாளர்கள் கடற்றொழிலை நாடிய வண்ணமுள்ளனர்.
குறிப்பாக நெத்தலி, கீரி இன மீன்கள் கரைவலைத் தோணிகளுக்குப் பிடிபட்டு வருவதால் இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் தினசரி தொழில்வாய்ப்பைப் பெற்று வருவதுடன், நாளாந்த வருமானத்தையும் பெற்று வருகின்றனர்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இவ்வேளை கடல் அன்னை கண் திறந்து வருவது சற்று ஆறுதலளிப்பதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)