ஏ-9 வீதியை வழிமறித்து மாணவருக்காக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமங்களின் மாணவர்களை தொடர்ச்சியாக பேருந்துகள் ஏற்றாமையை கண்டித்தும் - இது விடயத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறத்தி, இன்று அந்தப் பகுதி மக்கள் ஏ-9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - பனிக்கன்குளம், கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்களுக்கும் பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோ மீற்றர் இடைவெளி காணப்படுகிறது. இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டிய ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன. ஆனாலும், இந்த மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் சரியாக செயல்படுவதில்லை என்று மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பேருந்தை மறிக்கும் மாணவர்களை அரச, தனியார் பேருந்துகள் ஏற்றிச் செல்வதில்லை. இதனால், அவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது. இதனால், பல சிரமங்களையும் அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், பேருந்துகள் இங்குள்ள நிறுத்தங்களில் நிற்காததால் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், வயோதிபர்கள், நோயாளர்கள் எனப் பலரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில், தற்போது பரீட்சைகள் நடக்கும் நிலையில் நேற்று காலை 6.40 மணி முதல் மாணவர்கள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். ஆனால், காலை 8 மணியை கடந்தும் அவர்களை பேருந்துகள் ஏற்றவில்லை. இதனால், கோபமடைந்த மக்கள் நேற்று ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமையை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

ஏ-9 வீதியை வழிமறித்து மாணவருக்காக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)