
posted 14th September 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி அடக்கச் சடங்குகள் நடைபெறவிருப்பதையொட்டி இலங்கையில் அந்நாளை துக்கதினம் அனுஷ்டிக்கவும், அரச விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மகாராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கும் தினமான எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கள் கிழமை துக்க தினத்துடன், அரச விடுமுறை தினமாகவும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
மகாராணியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் இலங்கை மக்களின் அனுதாபத்தையும், துயரையும் வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மறைந்த மகாராணியின் இறுதிச் சடங்குகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள விருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடும், மக்களும் பெரும் பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் இக்கட்டான நிலையில் மாகாராணியின் இறுதிச்சடங்கில், நேரில் ஜனாதிபதி கலந்து கொள்ளத்தான் வேண்டுமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இங்கிருந்தே அனுதாபத்தை வெளியிடுவது போதுமானது தானே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய இக்கட்டான கால கட்டத்திலும், 38 இராஜாஹ்க அமைச்சர்களை நியமித்துவிட்ட ஜனாதிபதியா இத்தகைய பயண நிதி விரையங்களைப் பொருட்டாகக் கருதப்போகிறாரா? எனக் கேட்பாரும் உள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)