
posted 26th September 2022
தமிழர் தாயக கோட்பாட்டை உடைக்க சிங்கள ஆட்சியாளர் தொடர்ந்து நில அபகரிப்பையும் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதிலும் ஐனநாயக சட்டங்களை மீறி நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டு வருகின்றனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களை கடந்து கிளிநொச்சி யாழ்ப்பாணம் நோக்கி நாளுக்கு நாள் நில அபகரிப்பு சிங்கள ஆட்சியாளர்களினால் இராணுவ தேவைகளுக்கும், சிங்கள குடியேற்றங்களுக்கும் சத்தம் இன்றி தொடர்கிறது. என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
தமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன் வாழ்விடமான நிலத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் தொடர்ச்சியான நில அமைவு அதன் தாயக கோட்பாட்டை வலுப்படுத்தும் இதனை மாற்றி அமைத்து தமிழர் தாயக கோட்பாட்டை உடைக்க சிங்கள ஆட்சியாளர் தொடர்ந்து நில அபகரிப்பையும், சிங்கள குடியேற்றங்களை அமைப்பதிலும் ஐனநாயக சட்டங்களை மீறி நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டு வருகின்றனர். இது வெளிப்படையான அடிப்படை உரிமை மீறல்.
கிழக்கு மாகாணம் 1948 முன்பாக தமிழரின் பூர்வீக வாழ்விடமாக இருந்தது. ஆனால், பிரதமர் டி. எஸ் சேனநாயக்கா அரசாங்கம் முதலாவதாக அம்பாறையில் பட்டிப்பளை ஆற்றை கல்லோயா திட்டமாக மாற்றி சட்ட விரோத சிங்கள குடியேற்றங்களை அமைத்தார்.
பின்னர் அதன் வியாபகம் திருகோணமலை, அல்லை, கந்தளாய் வரை பரவி தமிழரின் பெரும்பான்மை நிலம் பறிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பலவீனப்படுத்தப்பட்டனர்.
பின்னர் புற்று நோய் போல வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசம் வெலிஓயா என்ற சிங்கள குடியேற்றத்துடன் தனிப் பிரதேச செயலகமாக மாறியது.
இன்று முழுமையாக பறி போகிறது. அத்துடன் வவுனியா, மன்னார் மாவட்டங்களை கடந்து கிளிநொச்சி யாழ்ப்பாணம் நோக்கி நாளுக்கு நாள் நில அபகரிப்பு சிங்கள ஆட்சியாளர்களினால், இராணுவ தேவைகளுக்கும், சிங்கள குடியேற்றங்களுக்கும் சத்தம் இன்றி தொடர்கிறது.
நில அபகரிப்பு என்பது தமிழர் தாயகத்தில் பாரிய இனப்படுகொலையாக மாறியுள்ளது. தமிழர் தாயக கோட்பாடு திட்டமிட்டு சிங்கள ஆட்சியாளர்களினால் சிதைக்கப்படுகிறது என வடக்க மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)