
posted 14th September 2022
“கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள சகல கலை, இலக்கிய மன்றங்களும் உறங்கு நிலைமாறி, இயங்கு நிலை மன்றங்களாகப் புத்தெழுச்சி பெற வேண்டும்.”
இவ்வாறு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவலகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்சன் கூறினார்.
நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலை, இலக்கிய மன்றங்களின் பிரதி நிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராகப் பதிவியேற்றதைத் தொடர்ந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள கலை, இலக்கிய மன்றங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தி வரும் கலந்துரையாடல் கூட்டங்களின் வரிசையில், இந்தக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதிவு செய்யப்பட்ட மன்றங்களின் செயற்பாடுகள், கருத்துக்கள், பதிவு செய்யப்படாத மன்றங்களைப் பதிவு செய்தல், புதுப்பித்தல், கலை மன்றங்களின் ஆலோசனைகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக்கின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“பதிவு இலக்க மொன்றைப் பெற்றுக் கொள்வதோடும் மட்டும் கலை, இலக்கிய மன்றங்களின் நோக்கு நிறைவு பெற்றுவிட முடியாது. இத்தகைய மன்றங்கள் ஸ்தாபிக்கப்படுவதன் முழு நோக்கமும் நிறைவேறும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் அமைய வேண்டும். நாட்டின் சூழ்நிலைகள் மற்றும் அசமந்தங்களால் பலகலைமன்றங்கள் உறங்கு நிலையிலேயே உள்ளன.
இந்நிலை தொடராது சகல கலை, இலக்கிய மன்றங்களும் இயங்கு நிலைக்கு புத்தெழுச்சி பெற வேண்டும்.
இத்தகைய கலை மன்றங்களின் சிறந்த செயற்பாடுகளின் மூலமே கிழக்கின் பண்பாட்டு விழுமியங்களை சிறப்புற மிளிரச் செய்யவும், பாதுகாக்கவும் முடியும்.
தற்போதய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எதிர்காலத்தில் இக்கலை, இலக்கிய மன்றங்களை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை நாம் முன்மொழிந்துள்ளோம்.
ஒவ்வொரு வாரமும் கலைஞர்கள் ஒன்று கூடவேண்டும், மன்றங்களின் மாதாந்தக் கூட்டங்கள் கிராமமாக நடைபெற வேண்டும். வாரம் ஒரு முறை கலாச்சார உத்தியோகத்தரின் கண்காணிப்பும் இதில் இடம்பெறும்.
மேலும், எமது பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கிழக்கின் இலக்கியவாதிகள் குறிப்பாக எழுத்தாளர்கள், கவிஞர்களின் ஆக்கங்களை நூலுருவாக்கும் திட்டம் தொடர் தேர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக நாம் வெளியிட்ட நூறு சிறுகதைகள் தொகுப்பு நூலின் இரண்டாம் பாகமும் தடையின்றி வெளியிடப்படும்” என்றார்.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப், மாவட்டக் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், நிருவாக உத்தியோகத்தர் சரின், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோரும் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)