
posted 11th September 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற நிலையிலும், நிலையற்ற ஒரு அரசியல் சூழல் நிலவும் இந்த சமயத்திலும், இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு மக்கள் அகதிகளாக வந்துகொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு குழுவுக்கு போட்டியாக இலங்கை அரசை வலியுறுத்தி இருப்பது எமக்கு கவலையை உண்டு பண்ணியுள்ளதாக முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்களில் அக்கறைக் காட்டிவரும் அமைப்பின் முக்கியஸ்தராக திகழும் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் டேவிட் அனோஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்களில் அக்கறைக் காட்டிவரும் அமைப்பின் முக்கியஸ்தராக திகழும் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் டேவிட் அனோஜன் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இந்திய தமிழ் நாட்டுக்கு தமிழர் இடம்பெயர்ந்து தற்பொழுது முகாம்களிலும் மற்றும் வெளியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்பொழுது இவர்களை இலங்கைக்கு மீளவும் அழைத்து வருவதற்காக ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் நீண்ட காலமாக முயற்சிகள் எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்ற நிலையில் தற்பொழுது இன்றைய இலங்கை அரசு இது விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய முகாம்களில் வாழும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டபோது டேவிட் அனோஜன் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தமிழகத்தில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நடைபெற்றுவரும் அரசும், அதன் செயல்பாடுகளும் அனைவராலும் வரவேற்கும் விதமாக உள்ளது.
சொல் வன்மையைவிட தனது செயல் வலிமையால் வியப்பூட்டும் விதத்தில் அனைவருக்குமான நல்லாட்சியை அவர் நடத்தி வருகிறார். இதில் தமிழகத்தில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
தமிழர்கள் அனைவரும் எங்கே எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான் என்பதை மனதில் ஏற்று தமிழக தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.
அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்து, அவர்களுக்காக என்றும் துணை நிற்போம் என்று கூறி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை ரூ.317.7 கோடிக்கு அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.,]
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறுவாழ்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நலத்திட்டங்களை அறிவித்து அவை மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என துரிதமாக செயல்பட்டும், செயல்படுத்தியும் வருகிறார்.
இந்தத் திட்டங்கள் யாவும் ஒரு தலைமுறை வாழ்வை முகாம்களில் விரக்தியுடன் கழித்த மக்களின் நம்பிக்கை விடியலாய் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளின் வாழ்விலும், புதிய தலைமுறையினரின் வளர்ச்சியிலும் இவை ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. புதிய தலைமுறையினரின் கௌரவமான, கண்ணியமான வாழ்வை இவை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளன.
முகாம்வாழ் பிள்ளைகளின் கல்வி மேம்பட பொறியியல், வேளாண் பொறியியல் மற்றும் முதுநிலை பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு அனைத்து கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகிய அனைத்தையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கலை, அறிவியல் மற்றும் பட்டப் படிப்பு படித்து வருகின்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு தகுதியினை மேம்படுத்திட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மறுவாழ்வு முகாம்களில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறன.
முகாம்களில் இயங்கி வரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டு அவர்கள் சிறு தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாமல் இருந்த மாதாந்திர பணக்கொடை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. சமையல், எரிவாயு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்களும், கோ - ஆப் டெக்ஸ் வாயிலாக முகாம்வாழ் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட விலையில் தரமுள்ள ஆடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, முகாம்களில் வசிக்கும் அனைத்து ஆண்டுகளிலும் பயிலக்கூடிய இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகைக்காக 4.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
முகாம்வாழ் தமிழர்களுக்கு பொருளாதார ரீதியில் கௌரவமான வாழ்க்கையை ஏற்ப்படுதிக் கொடுக்க 621 சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதியாக 6.15 கோடி ரூபாயும், 5000 இலங்கைத் தமிழர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழிற் கல்விகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கென 10 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், முகாம்களின் உடனடி அவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தரும் நோக்குடன் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தரம் மேம்பாட்டு நிதிக்காக 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 10 கும் மேற்பட்ட நலத் திட்டங்கள் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர் முகாம்களில் முதற்கட்டமாக 290 சதுர அடி கொண்ட 3510 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
குடிநீர், மின்சாரம், சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்தில் 17 கோடியே 17 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 320 வீடுகளை விரைவில் முதலமைச்சர் அவர்கள் திறந்துவைத்து பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுரிமைக்கானத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் தலைமையில் நலன் காக்கும் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழு, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 18 ஆயிரத்து 937 குடும்பங்களுடன், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரத்து 553 குடும்பங்களையும் பாதுகாத்து மேம்படுத்துவதுடன், அவர்களில் பெரும்பான்மையானவர்களின் நீண்ட கால கோரிக்கையான இந்திய குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட ரீதியான சாத்தியகூறுகளை ஆராய்வதற்கும், தங்கள் சொந்த விருப்பத்தில் இலங்கைத் திரும்ப விரும்பும் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு உதவுவதற்கும், தமிழக அரசுக்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை தயார் செய்து வருகிறது.
அனைத்தும் நம்பிக்கையோடு முன் நகரும்போது 'ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கழகம் எனும் அமைப்பு' (ஒவ்வர்) விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களிடம் அதிர்ச்சியளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் வெளிச் செல்லும் அனுமதி பெற்று எளிதாக நாடு திரும்ப முடிகிறது. 01.04.2002 முதல் 31.03.2022 வரை யுஎன்எச்சீஆர் ( UNHCR) உதவியுடன் 18014 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
கடவுச் சீட்டு மூலம் வந்து அவை காலாவதியாகி தங்கியிருப்பவர்களும், விசா கட்டணம் மற்றும் மிகைத் தங்கலுக்கான அபராதத் தொகையினை இந்திய அரசின் அனுமதியோடு தமிழக அரசு இனம்வாரியாகப் பிரித்து தள்ளுபடி செய்து அவர்கள் நாடு திரும்ப உதவுகிறது. இவ்வாறு இதுவரை 1597 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப இங்கு எந்த தடையும் இல்லாத நிலையில், தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற நிலையிலும், நிலையற்ற ஒரு அரசியல் சூழல் நிலவும் இந்த சமயத்திலும் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு மக்கள் அகதிகளாக வந்துகொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு குழுவுக்கு போட்டியாக இலங்கை அரசை வலியுறுத்தி இன்னொரு குழுவை அங்கு அமைக்கக் காரணம் என்ன?
அகதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த அமைப்பினர் எப்படி தன்னிச்சையாக இப்படி ஒரு நகர்வை முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகளையும், கடும் எதிர்ப்புகளையும் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்களில் அக்கறை காட்டிவரும் அமைப்பின் முக்கியஸ்தராக திகழும் கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் டேவிட் அனோஜன் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY