
posted 25th September 2022

அருட்பணி இராயப்பு அடிகளார்
மின்னாமல் முழங்காமல் மன்னார் மறைமாவட்டம் மக்கள் போற்றும் சிறந்த நல்ல ஒரு ஆன்மீகத் தலைவரை இழந்து தவிக்கின்றது.
66 வருடங்கள் நிலையற்ற இந்த பூமியில் வாழ்ந்து நிலையான வாழ்வுக்கு சனிக்கிழமை (24.09.2022) இறைவனால் அழைக்கப்பட்டுள்ளார் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி இராயப்பு அடிகளார்.
இவரின் திடீர் இழப்பை கேள்வியுற்ற மன்னார் மறைமாவட்டம் தற்பொழுது மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்பது வெளி வந்துக் கொண்டிருக்கும் அனுதாப செய்திகள் மூலம் புரியக்கூடியதாக இருக்கின்றது.
இவரில் தாங்கள் இறைவனைக் கண்டோம் என தெரிவிக்கின்றனர். காரணம் இவர் யாரையும் நோக்கும்போது முதலில் வெளிவருவது அவரின் புன்முறுவலே வெளியாகும் என்கின்றனர். அதுதான் உண்மையும் கூட.
இவரின் வாழ்வில் உலக விருப்பு வெறுப்புக்கு அப்பால் ஒரு சிறந்த மக்கள் போற்றும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகவும், ஆன்மீக வாழ்வை வாழ்ந்து காட்டியவராகவும் திகழ்ந்தவர் என்பது பலராலும் பறைசாற்றப்பட்டு வருகின்றது.
அமரர் அருட்பணி இராயப்பு அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பிச்சைக்குளம் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இக் கிராமத்தின் முதல் அருட்பணியாளர். அவரின் குடும்பத்திலும் இவரே மூத்தவர்.
இவர் 1985 இல் மன்னார் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு தோமாஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையினால் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மன்னார் பேராலயத்தில் உதவி பங்குத் தந்தையாகவும் பின் முருங்கன், ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் பங்கு தந்தையாகவும் பின் மன்னார் மருதமடு சிறிய குருமடத்தின் அதிபராகவும், இத்துடன் மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையில் ஆசிரிய பணியையும் நீண்ட காலம் மேற்கொண்டு வந்தார்.
இத்துடன் மன்னார் மறைமாவட்டத்தின் மரியாயின்சேனையின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.
இதைத் தொடர்ந்து இவர் தோட்டவெளி பங்கு தந்தையாகவும், பின் மடு தியான இல்லத்தின் இயக்குனராகவும், மன்னார் சாந்திபுரம் பங்கின் பங்கு தந்தையாகவும், இதைத் தொடர்ந்து கண்டி தேசிய குருமடத்தில் பயிற்சி பெற்றுவரும் அருட்சகோதரர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே அருட்பணியாளர் இராயப்பு இறைவன்பால் அழைக்கப்பட்டுள்ளார்.
இறைவனடி சேர்ந்த இராயப்பு அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் பணியாற்றியுள்ளதுடன், கல்விப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், சிறிய குருமட அதிபராகவும் இருந்து குருக்களை உருவாக்கத்திலும் திகழ்ந்த அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறி அவருடைய ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்னார் மக்கள் இறை வேண்டுதலுடன் ஒன்றித்து நிற்கின்றனர்.
இவரின் இறுதி சமய நிகழ்வுகள் மன்னாரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் இறுதிச் சடங்கு பின்னர் தெரிவிக்கப்படும் என மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY