
posted 22nd September 2022
'வவுனியா' என்ற தமிழ் பெயருக்கு 'வவுனியாவ' (Vavuniyawa) என்ற சிங்கள உச்சரிப்பையே ஆங்கிலத்திலும் வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தவறானதும் - வரலாற்றுப் பிறழ்வுமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார் வடக்கு மாகாண சபையின் தவிசாளர் சீ. வீ. கே. சிவஞானம்.
இதனை சுட்டிக்காட்டி வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு,
“வவுனியா நகர சபையை மாநகர சபையாக தாபித்தல் தொடர்பாக, கௌரவ பிரதமர், மற்றும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட 06/9/2022 ஆம் திகதிய 2296/05 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகைக்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது.
இந்த வர்த்தமானியில் "வவுனியா நகரசபை, வவுனியா மாநகரசபை" ஆக தாபிப்பது எனத் தமிழில் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் “Vavuniyawa Urban Council என்றும் Vavuniyawa Municipal Council” என்றும் உள்ளது. வரலாற்று ரீதியாக இந்த உள்ளூராட்சி மன்றத்தின் பெயர் தமிழில் "வவுனியா" என்றும் ஆங்கிலத்தில் "VAVUNIYA" என்றும் அறியப்பட்டும், பதியப்பட்டும் வந்தேயுள்ளது. எனவே, ஆங்கிலத்தில் “Vavuniyawa” என பிரசுரிப்பது தவறானதும் வரலாற்று பிறழ்வுமாகும். பெயர்ச் சொற்கள் - Proper Nouns மாற்றப்பட முடியாதனவாகும்.
எனவே 'வவுனியா' என்ற தமிழ் பிரதேசத்தின் வரலாற்றுப் பெயரை 'Vavuniyawa' என ஆங்கிலத்தில் அறியப்படுத்துவதோ - பதியப்படுவதோ தவறானது என்பதை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்து Vavuniya என ஆங்கிலத்தில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”, என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)