ஆரையம்பதியில் மாடிக்கட்டிடம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில், சுகாதார, வைத்திய சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மாடிக்கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

குறித்த மாடிக்கட்டிடத்தின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் 14 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறவுள்ளதாகவும், முதற்கட்ட கட்டிட நிர்மாண வேலைகள் மூன்று மாத காலத்துள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வருடம் மேற்படி மாடிக் கட்டிடத்தின் 2ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் 40 மில்லியன் ரூபா நிதியிலும் பூர்த்தி செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இந்த மாடிக் கட்டிடத்திற்கான முதலாம் கட்ட நிர்மாண அடிக்கல் நாட்டு வைபவம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் (பிரதம அதிதி) பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் சமாந்தரமாக 85 மில்லியன் பெறுமதி தொகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய வருகின்றது.

குறித்த அபிவிருத்தி வேலைகளுக்கு ஆவன செய்து, சிறப்புறவும், சீராகவும் நெறிப்படுத்திவரும் பிராந்திய பணிப்பாளர் டாக்டர். சுகுணனைப் பொது மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

ஆரையம்பதியில் மாடிக்கட்டிடம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)