அரசியல்  கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம்தான் என்ன?

அரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள், அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளன அல்லது தடை உத்தரவு பெற்றுள்ளார்கள் என்ற விவரங்களை எடுத்துத் தாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களுடனான கலந்துரையாடல் சனிக்கிழமை (10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன் போதே அவர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

உங்கள் பயணம் எமது தமிழ் அரசியற் கைதிகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுப்பதாக என்று முதற் கண் வாழ்த்துகின்றேன்.
எனினும் அவர்களுக்கு நன்மைகள் உடனேயே கிடைத்துவிடும் என்று எண்ணுவதைத் தவிருங்கள்.

காரணம், எவ்வளவு தான் ஜனாதிபதியானவர் எமக்கு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் தந்தாலும் அவர் இன்னொரு இனச் சார்புடைய கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றார் என்பதை நீங்கள் மறந்து விடலாகாது.

அவர்கள் இவரைப் பாவிக்கின்றார்கள். இவர் அவர்களைப் பாவிக்கின்றார். இது தான் இன்றைய நிலை.

இருந்தும் நாம் எமது கடமைகளைக் கட்சிதமாக நடத்திச் செல்ல ஆயத்தமாக வேண்டும்.

இதன் காரணத்தினால் நான் உங்களிடம் இருந்து சில விபரங்களை எதிர்பார்க்கின்றேன் என்பதைச் சொல்லி வைக்கின்றேன்.
மூன்று விடயங்களுக்கு நான் பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

  • ஒன்று, எமது சிறைக் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள் அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளன அல்லது தடை உத்தரவு பெற்றுள்ளார்கள் என்ற விபரங்களை எடுத்துத் தாருங்கள்.
  • இரண்டு, தண்டனை பெறப்பட்டவர்களின் வழக்குகளில் எத்தனை பேர் வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள், எத்தனை பேர் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் சேர்த்து வேறு சாட்சியங்களின் அடிப்படையிலும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர், மற்றும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களே இல்லாமல் வேறு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை எடுத்துத் தாருங்கள்.

  • மூன்றாவதாக, சிறையில் வாடும் ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதியும் தற்போது என்னென்ன குறைகளை, குறைபாடுகளை, பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பன பற்றிய விவரங்கள்.

இந்த விபரங்களை முன்வைத்து நீதியமைச்சருடன் நான் வேண்டுமெனில் பேச இருக்கின்றேன்.

ஆகவே கூடிய விரைவில் இந்த விவரங்களை எனக்கு எடுத்துத் தாருங்கள்.

திரு. கோமகன் போன்றவர்கள் இன்னொரு தகவலையும் எனக்குத் தர வேண்டும்.

அதாவது, அசோக டீ சில்வா அறிக்கையானது நான் எவ்வளவு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. அதன் பிரதி எனக்கு வேண்டும். அதில் கூறப்பட்டிருக்கும் 38 பேரும் 2019ம் ஆண்டுக்குப் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று அறிகின்றேன்.

அப்படியானால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவர் கூட நாம் கொடுத்திருக்கும் 46 பேர்களில் அடங்க மாட்டார்களா என்ற விபரம் தேவை. தற்போது அந்த 38 பேரை விடுவிக்கலாம் என்ற கருத்து அரச தரப்பினர் இடையே மேலோங்கி நிற்பதாக அறிகின்றேன்.

அப்படியானால் பல வருட காலங்கள் சிறையில் வாடும் 46 பேருக்கும் எந்த வித நன்மைகளும் கிடைக்காமல் போய்விடுமா? இது பற்றி பேசுவதானால் மேற்குறிப்பிட்ட அசோக டீ சில்வா அறிக்கை என் கைகளுக்குக் கிடைக்க வேண்டும்.

திரு. கோமகன் போன்றவர்கள் அதற்கான உதவிகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் யாவரும் இன்று பாதுகாப்பாக கொழும்பு சென்று உங்கள் உற்றார் உறவினரைப் பார்த்து வர, இறைவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் நல்லாசி வழங்குவாராக!

அன்புடன் உங்கள் யாவருக்கும் விடை கூறி அனுப்புகின்றேன் என்றார்.

அரசியல்  கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம்தான் என்ன?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)