அக்டோபர் தேசிய வாசிப்பு மாதம்

அரசாங்கம் பிரதி வருடமும் அக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதால் இந்த வருடமும், குறித்த வாசிப்பு மாத நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளது.

இதன்படி இந்த வருடத்திற்குரிய எதிர்வரும் அக்டோபர் மாத, தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் விசேடமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சகல பொது நூலகங்களிடமும் கோரப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி அமைப்புக்களுக்கும் சொந்தமான பொது நூலகங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
“அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு மேற்படி வாரியம் கோரியுள்ளது.

மேலும், வாசிப்பு மாத நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைப்பு செய்வதற்காக, வாசிப்பு மாத செயற்திட்டக் குழு ஒன்றை அங்குராப்பணம் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருட (எதிர்வரும் அக்டோபர் மாதம்) தேசிய வாசிப்பு மாத பயனுள்ள நிகழ்ச்சிகளை நிறைவு செய்த நூலகங்களை தெரிவு செய்து பரிசுகள், சான்றிதழ் மற்றும் விருதுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக எதிர்வரும் தேசிய வாசிப்பு மாதத்தில் (அக்டோபர்) வினைத் திறன் மிக்க நிகழ்ச்சித் திட்டங்களுக்கு 2023ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தின் தேசிய விழாவின் போது பரிசுகள், சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் நூலக மட்டங்களில் இடம்பெறவுள்ளதால், ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் உரிய பொது நூலகங்கள், மற்றும் கிளை நூலகங்கள் வெவ்வேறாக தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்தல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் நூலகங்கள் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் மதிப்புரை வழங்கப்பட்டதன் பின்னர் விருதுகளுக்கு உரித்துடைய நூலகங்கள் எவை எனவும் தீர்மானிக்கப்படவுமுள்ளன.

அக்டோபர் தேசிய வாசிப்பு மாதம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)