13 ஆவது திருத்தச் சட்டம்

இந்திய மத்தியஅரசால் ஜெனிவா கூட்டத் தொடரில் முன் வைத்த 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துமாறு முன் வைத்த கோரிக்கை வரவேற்கத்தக்க ஒரு செயற்பாடாகும். இது சிறுபான்மை மக்களின் அதிகாரப் பங்கீடு தொடர்பான அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு களமாகும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எப். ப.ம.) இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் அமுலாக்கம் தொடர்பில் இந்தியா ஜெனீவாவில் வலியுறுத்தியுள்ளமையை வரவேற்றுள்ள அவர் இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் தமிழ் மக்களுக்கென முன் வைத்த திட்டமாகும். இத்திட்டத்தை இன்னும் இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்த வில்லை.

மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற இலங்கை அரசு இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை காரணம் காட்டி முப்பது வருடங்களுக்கு மேலாக இதை அமுல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது. 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கையில் பாராளுமன்றத்தில் முடிவெடுத்து அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.

இதை அமுல்படுத்துவது பாராளுமன்றத்தையும், மாகாண சபையையும் ஆட்சி புரிகின்ற கட்சிகளைப் பொறுத்தவையாகும். வருகின்ற எதிர் கட்சிகளும் பரிபூரண ஆதரவுகளை வழங்கும் பட்சத்தில் முழுமையாக அமுல்படுத்த முடியும். கடந்த காலங்களில் எந்தளவிற்கு இதை அமுல்படுத்துவதற்கு வடக்கிலுள்ள கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கி இருந்தன என்னும் கேள்ளி தமிழ் மக்களுக்கு மத்தியில் தொக்கி நிற்கின்றன.

எனவே, வடக்கு கிழக்கிலுள்ள கட்சிகள் வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தி 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபையினுடைய பங்குகளை அமுல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பல அமைப்புக்கள் வாயிலாக பல்வேறு கொள்கைகள் இனப்பிரச்சினை தொடர்பாக முன் வைக்கப்பட்டது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களும், சில அமைப்புக்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இலங்கையிலுள்ள ஒரு சில அரசியற் கட்சிகளும் 13ஆவது திருத்தச் சட்டத்தை வேண்டா விருந்தாளியாவே உற்று நோக்கி வந்தனர்.

இன்றுள்ள சூழ்நிலையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு சாதகமாக சில விடயங்கள், சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும், 13ஆவது திருத்தம் தொடர்பாக ஒரு நாடு பலமாக முன் வைத்துள்ள விடயத்தை நாம் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்த கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

13 ஆவது திருத்தச் சட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)