03 இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சங்கரத்ன தேர விளக்கமறியலில்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரை 16ஆம் திகதி வெள்ளிக் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை சுபத்ரா ராமய விகாரையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பிலான வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த விகாரையில் புதிதாக சேர்ந்து கொண்ட 08, 13 மற்றும் 14 வயது நிரம்பிய 3 இளம் பிக்குகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அங்குள்ள சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது 03 இளம் பிக்குகளின் ஆசன பின்துவாரத்தில் காயங்கள் மற்றும் தழும்புகள் காணப்படுவதுடன், மூவரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த இளம் பிக்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தமது தலைமை பிக்குவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, குறித்த இளம் பிக்குகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அவசர பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர், பெண்கள் விசாரணைப் பிரிவினர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் பிரகாரம் விசேட பொலிஸ் குழுவொன்று, செவ்வாயன்று (13) கல்முனையிலுள்ள விகாரைக்கு சென்று குறித்த விகாராதிபதியை கைது செய்து, கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சங்கரத்ன தேர விளக்கமறியலில்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)