வீதிகளை மறித்து செய்யும் வியாபாரத்திற்குத் தடை

நிந்தவூர் பிரதேசத்தில் பொது மக்கள் பயணிப்பதற்கான முக்கிய சில வீதிகளை ஆக்கிரமித்து இடம்பெற்று வந்த அங்காடி வியாபார நடவடிக்கைகளுக்கு முற்றாகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் பொதுமக்களிடையே இருந்து கிடைக்கப் பெற்ற புகார்களை அடுத்தும், தொடரும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரதேச சபை இந்த கண்டிப்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக கூடுதலாக மீன் வியாபாரமே அங்காடி வியாபாரிகளால் குறிப்பிட்ட சில வீதிகளிலும், முக்கிய சந்திகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனைத் தவிர்ப்பதற்காக பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் எடுத்துக் கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தைக் கட்டிடங்கள் பாதுகாப்புடன் கூடியதாகப் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்று 2 ஆம் திகதி முதல் சகல அங்காடி வியாபார (அனுமதியற்ற) நடவடிக்கைகளும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், புனரமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தையிலேயே மீன், மரக்கறி போன்ற வியாபாரங்கள் இடம்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மாந்தோட்ட சந்திப் பகுதி, அலியாண்ட சந்தி மற்றும் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியிலும் அனுமதியற்ற முறையில் நடைபெற்று வந்த அங்காடி வியாபார நடவடிக்கைகள் யாவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்காடி வியாபார நடவடிக்கைகளைத் தடைசெய்து, புனரமைக்கப்பட்ட பொதுச்சந்தையை மீளவும் இயங்க ஆவன செய்துள்ள நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் தாஹிரின் இந்த நடவடிக்கையைப் பிரதேச பொது மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளதுடன், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

வீதிகளை மறித்து செய்யும் வியாபாரத்திற்குத் தடை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)