விதைப்பிற்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றுக

“மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் பெரும் போக விவசாயச் செய்கைக்கான விதைப்பிற்கு முன்னர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்”

இவ்வாறு, முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ப.ம, இரா. துரைரெத்தினம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பிலும், சிறுபோக செய்கையின் போதும், அறுவடையின் போதும் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகள், அழிவுகள் தொடர்பிலும் கவலை தெரிவித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைரெத்தினம் தமது அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சிறுபோக விவசாயச் செய்கையிலும், அதற்கு முன்னரும் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைச் செய்கை, மேட்டு நிலப்பயிர் செய்கைகளில் பல விவசாயிகளுக்கு எதிர்பார்த்திருந்த விளைச்சல் கிடைக்காததனால் பெரும் நட்டத்தை எதிர்நோக்கினர். இத்தோடு அரசாங்கத்தால் அறிவித்திருந்த விவசாயிகளின் கடன் திட்டத்தை இரத்துச் செய்த விடயத்தில் கூட பாதிப்புக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கிருமி நாசினிகள், யூரியா, எரிபொருள் பற்றாக்குறை கடன் திட்டம் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் போன்ற பிரச்சினைகள் இம்முறை தீர்க்கப்படுமா? தற்சமயம் ஆரம்பிக்கப்படவுள்ள விவசாயச் செய்கையில் பலன் கிடைக்குமா? என விவசாயிகள் அங்கலாய்த்த வண்ணமுள்ளனர்.

எனவே, விவசாயச் செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னரே விவசாயிகளுக்கான தேவைகள் குறிப்பாக, கிருமி நாசினிகள், யூரியா, எரிபொருள் போன்றவைகள் விவசாயிகளின் கைகளுக்கு கிடைக்க வேண்டுமென்பதனால் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி அமைப்புக்கள் ரீதியாக முடிவுகளை எடுத்து இறுதியாக நடைபெற்ற மாவட்ட விவசாயக் அபிவிருத்திக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயம் தொடர்பான நலன் விரும்பிகள், சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள், செயலாளர்கள் அனைவரும் அரசுடன் பேசி வேளாண்மை விதைப்புக்கு முன் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் கிடைக்க வழி வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விதைப்பிற்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றுக

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)