
posted 22nd September 2022
வட மாகாணத்தில் கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.
கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த இந் நிகழ்வில்;
வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதார காணிகள், வதிவிடக் காணிகள், விவசாய செய்கை, மேய்ச்சல் தரைகள், சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் விவசாய அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)