
posted 17th September 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாட்டை 2015ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடாத்தி வருகிறது. அந்த வரிசையில், அதன் எட்டாவது மாநாடு கடந்த புதன்கிழமை விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். வசந்தரூபா தலைமையில் இடம்பெற்றது.
“உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில் நுட்பங்கள்” என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஜப்பான் கய்சு பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் ஒகடா கைசு ஜப்பானில் இருந்து வருகை தந்து பிரதான பேச்சாளராக் கலந்து கொண்டு, “ஜப்பானின் ஸ்மார்ட் விவசாயம் - ஒரு பார்வையும் அதன் போக்கும” எனும் தலைப்பில் முதன்மைப் பேருரையாற்றினார்.
இவ்வாய்வு மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விவசாய உயிரியல், விலங்கு விஞ்ஞானம், மண், சூழல் மற்றும் பொறியியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், நீர், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப் பொருள்களில் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)