
posted 21st September 2022
மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். உமர் அலி இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது கருத்துரைகையில் அவர் கூறியதாவது;
மருதமுனை பிரதேசத்தில் சுனாமியினால் வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக மேட்டு வேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் சிட்டி வீட்டுத் திட்டம், சுனாமி வீட்டுத் திட்டம், இஸ்லாம் நகர் மற்றும் ஸகாத் நிதிய வீட்டுத் திட்டங்கள் என்பவற்றில் சுமார் 700 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், இப் பகுதியில் இதுவரை மையவாடி ஒன்று அமைக்கப்படாத காரணத்தினால் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மருதமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்திருக்கின்ற பாரம்பரிய மையவாடி இங்கிருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பதால் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த மக்கள் பல வருடங்களாக பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களது நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மையவாடியை மேட்டுவட்டை பகுதியில் அமைப்பதற்கு பொருத்தமான காணியொன்றை ஒதுக்கீடு செய்து தருவதாக பிரதேச செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆகையினால், எமது மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றினார். அதையடுத்து மற்றும் சில உறுப்பினர்களின் ஆதரவான கருத்துக்களுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் விலங்கறுமனைகளை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணிகளை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்து தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.
இவை தவிர மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்த விவாதங்களும் இடம்பெற்றன. அத்துடன் உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும் முதல்வரினால் பதில்கள் வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)