
posted 30th September 2022
அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்குள் பிரவேசித்து அழிவுகளை ஏற்படுத்திவரும் சம்பங்கள் தொடர் தேர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், புதிதாக நீர் நிலைகளில் வாழும் முதலைகளின் பிரவேசத்தாலும் தற்சமயம் மக்கள் அவதியுறும் நிலமை உருவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் நீர்நிலைகளில் இருந்து வெளியேறி வீதிகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
மாவடிப்பள்ளி பாலம், ஒலுவில் களியோடை பாலம், கிட்டங்கி பாலம், சாய்ந்தமருது, மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த வாவிகள், குளங்களில் இருந்து முதலைகள் வெளியேறுவதாகவும் மாலை மற்றும் இரவுப் பொழுதுகளிலேயே அதிகளவில் பெரிய முதலைகள் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வீதியால் செல்லும் பயணிகளும் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அதேவேளை வயல் நிலங்கள், கால்வாய்களை அண்டிய பகுதிகளில் நீரை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால் நடைகள், புற்றரைகளில் மறைவாக படுத்துறங்கும் முதலைகளினால் தாக்கப்பட்டு, இரைக்குள்ளாகின்றன. அத்துடன் தமது கால்நடைகளை தேடிச்செல்கின்ற சந்தர்ப்பங்களிலும் புல் வெட்டுவதற்காக செல்லும்போதும் கால்நடை வளர்ப்பாளர்கள் முதலைகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். அண்மையில் இவ்வாறு சென்ற ஒருவர் ஒலுவில் களியோடை பாலத்திற்கருகில் முதலையினால் தாக்கப்பட்டு, உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் மற்றும் வெளி நடமாட்டம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் பொது மக்களுக்கு எவ்வித விழிப்பூட்டல் மற்றும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் ஒரு சில இடங்களில் அபாய அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான இடங்களில் இந்த அபாய அறிவிப்பு காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)