மீனின் விலையைக் குறைக்க ஒரேயொரு வழிதான் உண்டு - அன்னராசா

வடக்கு மாகாண ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நேற்று புதன் (14) காலை யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மீனவர்கள் எதிர் நோக்கும் முக்கியமாக மூன்று பிரச்னைகளை நாங்கள் கலந்துரையாடினோம்.

தற்காலத்தில் கடற்தொழில் சமூகம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கின்றது. அதேபோல இலங்கையிலே அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையினால் கடற்தொழில் சமூகம் எப்படி பாதிக்கப்படுகின்றமை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறாக காணிகள் வழங்கப்படுவது அல்லது அபிவிருத்தி என்ற போர்வையில் அதாவது முதலீடு என்ற போர்வையில் கடற்தொழில் சமூகத்திற்கு பாதகமான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடலில் நாங்கள் பேசி இருக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இலட்சம் மீனவ மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளால் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தை கைவிட்டுப் போகின்ற நிலையை நாங்கள் உணர்கின்றோம். அது ஒரு கவலையளிக்கின்ற விடயமாகும்.

அதேபோல், வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள், ‘கடற்தொழில் சமூகத்திற்கு மண்ணெண்ணெய் கிடைக்கின்றது. ஆனால், அதிக விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுகிறது’ எனக் கவலை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் 87 ரூபாய்க்கு எரிபொருள் விற்ற போது தொழில் இலகுவாக செய்து குறைந்த விலையில் மக்களுக்கு மீன் விற்கக்கூடியதாக இருந்தது. தற்போது விலை அதிகரிப்பின ஊடாக எங்களுக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் எடுத்து தொழில் செல்வதற்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஆனால் பிடிக்கப்படுகின்ற மீன் ஏழாயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகின்றது.

நமது முதலைக் கூட பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்குரியதாகக் காணப்படுகின்றது.

இதனால், குறைந்த அளவு தொழிலாளர்கள் மாத்திரமே தொழிலுக்கு செல்கின்றார்கள். அதிகளவான மீனவர்கள் வேறு தொழில்களில் அதிக நாட்டம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

எமக்கு எரிபொருள் குறைந்த விலையில் பெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிக அவசியம். அந்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் எதிர்காலத்தில் மீனின் விலை குறைத்து விற்பனை செய்ய முடியும்.

இரண்டு வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் புயல் தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு இன்னமும் இழப்பீட்டு உதவிகள் சென்றடையவில்லை. அந்த இழப்பீடுகள் நமக்கு கிடைக்கவில்லை.
கடற்தொழில் சமூகத்திற்கு என்று எந்தவித இழப்பீடும் வழங்கப்படவுமில்லை. இது வடக்கு மக்களுக்கு பெரும் கவலை அளிக்கின்றது, என்றார்.

எனவே, மண்ணெண்ணெய் விலையை குறைத்தால் வடக்கில் மீன் விலை குறைக்க முடியும் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

மீனின் விலையைக் குறைக்க ஒரேயொரு வழிதான் உண்டு - அன்னராசா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)