பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்

நமது இனத்தின் வரலாறு எம் பரம்பரைக்கும் போக வழி செய்வோம்

நம் இனத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம் போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தியாகி திலீபன் நினைவேந்தல் ஆரம்ப நாளில் நல்லூரில் அவரின் தூபி நினைவிடத்தில் இடம்பெற்ற அரசியல் சர்ச்சை தொடர்பிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி தமிழ் மக்களின் அரசியல், அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நிறைவும் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த முதல் நாளும் நேற்றாகும்.

உலகின் பல இடங்களில் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட நாளில், தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த புனித மண்ணில் அரங்கேறிய சில விரும்பத்தகாத செயல்கள் மக்களிடையே அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தியாகத்தின் எல்லையை கேள்விக்கு உள்ளாக்கிய தியாகி திலீபனின் நினைவேந்தல் நாளில் அரங்கேற்றப்பட்ட விரும்பத்தகாத செயல்கள் சந்தேகங்களையும் எழுப்பி சென்றுள்ளன. தியாகி தீபம் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் எவையுமே 35 வருடங்கள் கடந்தும் நிறைவேறாது அந்தரத்தில் தொங்கியே நிற்கிறது.

அவரின் கனவுகளை மெய்ப்பிப்பதே தமிழ் மக்களின் கடமையாகவும் உள்ளது.

தொடர்ந்து இவ்வாறான நம் இனத்தையும் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம்போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் எனவும், இவ்வாறான செயல்பாடுகள் தொடர்ந்து நம் தாயகத்தில் இடம்பெறக் கூடாது என வலியுறுத்துவதுடன், இந்த விடயத்திற்கு எமது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது என்றுள்ளது.



எஸ் தில்லைநாதன்

வேலணை பிரதேச சபைக் கூட்டத்தில் தியாகி திலீபனுக்கான நினைவேந்தல்

வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் வியாழன் (15) அன்று நடந்தபோது தியாகி திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியினரான ஈ. பி. டி. பியினர் இந்தக் கோரிக்கையை நிராகரித்து சபையை ஒத்திவைத்திருந்தனர்.

ஆனால் சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால் தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் உணர்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது .

இதே தருணத்தில், வேலணை வங்களாவடிச் சந்தியில் பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவுத் தூபியில் தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வட மாகாணசபை அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், யாழ். மாநகரசபை பிரதி முதல்வர் ஈசன், வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செ. பார்த்தீபன், தங்கராணி, யசோதினி, பிரகலாதன், சிறீபத்மராசா, வசந்தகுமாரன், அசோக்குமார், பிலிப் பிரான்சிஸ், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ), கனகையா மற்றும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர்களான குயிலன், கந்தசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.



எஸ் தில்லைநாதன்

அஞ்சலிப்பதில் அரசியலைக் கலக்காதீர்கள்

“அஞ்சலிப்பதில் ஏன் அரசியலைக் கலக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அது மிகவும் வேதனை அளிக்கின்றது. அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளன. உங்களுடைய அரசியலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். திலீபனை நேசிப்பவர்கள் திலீபனை அஞ்சலியுங்கள். ஏன் முரண்படுகின்றீர்கள்?”, இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம்.

தியாகதீபம் திலீபன் நினைவுநாளான நேற்று (15) நினைவு தூபியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஜனநாயகப் போராளிகளுடன் நானும் சென்றிருந்தேன். அந்த நிகழ்வை தூரத்தில் நின்று பார்வையிட்டேன். தூபியின் முன்றலில் விரும்பத்தகாத சம்பவம் இடம்பெற்றது மிகவும் வேதனை அளிக்கின்றது.

திலீபனுக்கு உலகத்திலேயே எத்தனை தூபிகள் இருந்தாலும் திலீபன் உண்ணாவிரதம் இருந்தது இந்த நல்லூரிலே. எனவே, இந்தத் தூபிதான் அடிப்படையான தூபி. எல்லோராலும் ஏற்கப்படுகின்ற தூபி. இந்த தூபியானது என்னுடைய சொந்த பணத்தில் எனது முயற்சியால் தூபி கட்டப்பட்டு அது மீண்டும் புனர்நிர்மாணமும் செய்து வைக்கப்பட்டது. யாரும் இந்த தூபிக்கு உரிமை கோரமுடியாது.

ஆனால், அவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஆணையாளராக இல்லாவிட்டால் அந்த இடத்தில் தூபியை கட்டியிருக்க முடியாது. அஞ்சலிப்பதில் ஏன் அரசியலைக் கலக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அது மிகவும் வேதனை அளிக்கின்றது. அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளன. உங்களுடைய அரசியலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். திலீபனை நேசிப்பவர்கள் திலீபனை அஞ்சலியுங்கள். ஏன் முரண்படுகின்றீர்கள்?

கடந்த வருடங்களில் சுதந்திரமாக நினைவேந்தலை செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதிக்குமாறு நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதினேன். எழுதிய அதே வசனத்தை எனக்கு மீண்டும் பதில் அளித்து அனுப்பியதன் பிரகாரம் இம்முறையும் எந்தவித தடையும் இன்றி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எங்களுக்குள்ளே நாங்கள் முரண்பட்டுக் கொள்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வேதனை அளிக்கின்றது என்றார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)