நடமாடும் சேவைகள்

“அரச திணைக்களங்களின் சேவைகளை பொது மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே இத்தகைய சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் கூறினார்.
அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் பொலிஸ் சேவையின் 156 ஆவது வருட நிறைவையொட்டிய பொலிஸ் வார நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தினால்இ இந்த பொலிஸ் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.

நிந்தவூர் பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் ஐ.எல். ஐயூப்கான் தலைமையில் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஷ்ரப் பொலிஸ் ஆலோசனைக் குழுத்தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம். றசீன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் சரின் அட்டப்பள்ளம் சிறீ சித்திவிநாயகர் ஆலய பிரதம தர்மகர்த்தா எம். கோபாலன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கடந்த 156 வருடகாலமாக நாட்டுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் பொலிஸார் ஆற்றிவரும் சேவைகள் பெரிதும் பாராட்டத்தக்கவையாகும்.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் முதன்மை இலக்கையும் அமைதி சமாதான நோக்கையும் கொண்டதாகும்.

இதேவேளை முப்பது வருடகால யுத்தம் மற்றும் அனர்த்த நிலமைகளால் அல்லலுற்ற மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆவணக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், தீர்வுகளைக் காணவும் பொலிஸ் நடமாடும் சேவைகள் பெரும் பயனளிக்கின்றன.

குறிப்பாக மக்களின் காலடிக்கு அரச சேவைகளை கொண்டு செல்லும் நோக்குடன் நடமாடும் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன.

மேலும், சிவில் கருமங்களை நிவர்த்திக்கவும், இடம்பெயர்வு, நஷ்டஈடு பெறல் மற்றும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடுகளை இலகுவாகப்பெறும் வழிவகைகள் இச்சேவைகள் மூலம் கிடைக்கின்றன.

எனவே இத்தகைய நடமாடும் சேவைகள் மூலம் மக்கள் பயன்பெற முன்வரவேண்டும்.

பின்தங்கிய மக்கள் வாழும் இப்பிரதேசத்தைத் தெரிவு செய்து பயனுள்ள இந்த நடமாடும் சேவையை நடாத்த முன்வந்த நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களைப் பெரிதும் பாராட்டுகின்றேன் என்றார்.

நடமாடும் சேவைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)