
posted 4th September 2022
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசமான நிந்தவூர்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு அனர்த்த பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகைதரவுள்ளார்.
நிந்தவூர் கடலரிப்பு விவகாரம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை அமைச்சரை கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து தெளிவுபடுத்தி பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார் இந்த சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ், நேரில் வருகை தந்து பார்வையிட்டு ஆவன செய்வதாக உப தவிசாளரிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் தமது நிந்தவூர்ப்பகுதிக்கான விஜயத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இதேவேளை உபதவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை அசைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த போது பல்வேறு கோரிக்கைகளையும் அவரிடம் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை வழங்குதல், கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், கடலரிப்பினை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கு கிழக்கு மேற்காகத் தடுப்புச்சுவர் அமைத்தல் முதலான கோரிக்கைகளை உபதவிசாளர் சுலைமாலெவ்வை அமைச்சரிடம் முன்வைத்து வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் வருகை இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவைத்தருமா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)