
posted 30th September 2022
நீதிமன்ற உத்தரவின் படி யாழ் பொதுநூலக சிற்றுண்டிச்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.
செப்ரெம்பர் மாதம் யாழ். மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09ஆம் திகதி பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடத்துநருக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் 28 ஆம் திகதி மீள் பரிசோதனை செய்தபோது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் சிற்றுண்டிச்சாலை நடத்துநருக்கு எதிராக யாழ். மேலதிக நீதவான் மன்றில் நேற்று (29) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சிற்றுண்டிச்சாலை நடத்துநர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000 ரூபா தண்டம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிச்சாலையைச் சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிடப்பட்டது.
இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)