
posted 15th September 2022
ஆழமான சமய நெறிமுறையும், அதன் வலிமையான கட்டமைப்புக்களையும் கொண்ட உன்னதமான நெறிமுறை கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்ட மன்னார் மாவட்டத்தை பற்றி எதிர்காலத்தில் கூட கிஞ்சித்தும் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக் கூடாது என டயானா கமகேயை மிக மிக கடுமையாக எச்சரிக்கின்றோம் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் தலைவர் வி.எஸ். சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வி.எஸ் சிவகரன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
பின்கதவால் அரசியலுக்கு வந்து, சந்தர்ப்பவாதியாக அரசுப் பக்கம் தாவி, சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சராக ஆகிவிட்டீர்கள். ஆனால், அடிப்படையில் ஒழுக்கமுள்ள ஒரு குடும்ப பெண்ணாக உங்கள் கருத்து அமையவில்லை.
இரவு களியாட்ட விடுதியில் உங்கள் பெண் பிள்ளையை சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆட விடுவீர்களா? அப்படி விடுவீர்கள் என்றால் உங்கள் மாவட்டத்தில் அதை செய்யுங்கள்.
இவ்விதமான மூன்றாந் தரமான கருத்து ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானம்.
தமிழ் மக்கள் ஒழுக்கத்தை உயர்வாக எண்ணியதால் தான்,
“ஒழுக்கம் விழுப்பத்தை தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”
எனும் வள்ளுவ அறத்தில் பண்பாட்டியலை கட்டமைத்தவர்கள் தமிழர்கள்.
மன்னார் மாவட்டம் மிகத் தொன்மையான வரலாற்றுப் பின்னணியும், பாரம்பரிய பூர்வீகமும் கொண்ட தனித்துவ பண்பாட்டியல் மரவு வழி சொல்நெறியைக் கொண்டவர்கள்.
ஒப்பீட்டு அடிப்படையில் குற்றச்செயல்கள் குறைந்த ஆழமான சமய நெறிமுறையும், அதன் வலிமையான கட்டமைப்புக்களையும் கொண்ட உன்னதமான நெறிமுறை கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்ட மன்னார் மாவட்டத்தை பற்றி எதிர்காலத்தில் கூட கிஞ்சித்தும் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக்கூடாது என டயானா கமகேயை மிக மிக கடுமையாக எச்சரிக்கின்றோம்.
இவ்விதமான மூன்றாந்தரமாக சிந்திக்கும் மனிதர்கள் அரசியல் வாதிகளாக இருப்பதால் தான் இந்த நாடு உருப்படாமல் உள்ளது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் தலைவர் வி.எஸ் சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)