
posted 2nd September 2022
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடல் அரிப்பினைத் தடுப்பதற்காக, நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வை.எல். சுலைமா லெவ்வையின் தொடர் முயற்சியின் கீழ், மேலதிகமாக 05 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி, நிந்தவூர் பிரதேச 09ம் பிரிவில் ஏற்பட்ட கடல் அரிப்பு உக்கிரம் அடைந்திருந்த நிலையில், அன்றைய தினம் களத்தில் நின்று பணியாற்றியிருந்தார். இந்நிலையில் கடந்த 22ம் திகதி கடல் அரிப்பினைத் தடுப்பதற்கான விஷேட கூட்டமானது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் நடைபெற்றிருந்தது. இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் மேற்படி கடலரிப்பு விடயம் பற்றிய உரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தவிசாளர் தாஹிரினால், பிரதித் தவிசாளர் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக பிரதி தவிசாளரின் முயற்சியின் கீழ் குறித்த தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன், இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு பிரதித் தவிசாளர் கொண்டுவந்ததையடுத்து பிரதம செயலாளரினால் குறித்த விடயம் பற்றி கரையோர பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்காக வழங்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் (02) கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ். ரணவக்கவினை சந்தித்து, பிரதம செயலாளரின் வேண்டுகோள் மற்றும் தனது வேண்டுகோளை சமர்ப்பித்திருந்ததுடன், இவைகளை கருத்திற் கொண்ட பணிப்பாளர் நாயகம், ஏற்கனவே தற்காலிக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கு மேலதிகமாக 05 மில்லியன் ரூபாய் நிதியினை உடன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடு பற்றிய விபரங்களை இப்பிராந்திய கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் துளசிதாசனுடன், பணிப்பாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (கரையோர அபிவிருத்தி) பொறியியலாளர் திருமதி எல்.டி. றுகுனகே ஆகியோர்கள் இன்றைய தினம் (02) தொலைபேசி மூலம் உரையாடியதற்கிணங்க, வேலைகளை துரிதப்படுத்துமாறும் அவர்கள் பணிப்புரை விடுத்தனர்.
அத்துடன் நிந்தவூரில் தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்திய வள அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, எதிர்வரும் 6ம் திகதி 4பேர் கொண்ட குழுவினை நிந்தவூர் பிரதேசத்திற்கு அனுப்பவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தன்னிடம் தெரிவித்ததாக பிரதித் தவிசாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நிந்தவூர் அல்-மினா மீனவர் சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட விடயங்கள் பற்றியும் பிரதம செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், தற்போது கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பிரதேசத்தில் மீனவ வள்ளங்கள், தோணிகள் என்பவற்றை நிறுத்தி வைப்பதற்கு தேவையான இடத்தினை ஒதுக்கித் தருமாறும், சேதமடைந்த கிணறுகளுக்குப் பதிலாக, புதிய கிணறுகளை அமைப்பதற்கும், கடலரிப்பினைத் தடுப்பதற்காக கிழக்கு - மேற்காக நிலையான தடுப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டிய அவசியம் பற்றியும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதித் தவிசாளர் சுலைமா லெவ்வை மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)