
posted 13th September 2022
இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் ஆணையுடன் புதிய ஆட்சி அமைய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில், குட்டித்தேர்தல் ஒன்றுக்குக்கால் கோள் இடப்படுவதாக அறியவருகின்றது.
அதாவது, நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலே விரைவில் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இதன்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானிப் பத்திரம் எதிர்வரும் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தி அதற்கான பிரதி நிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த உள்ளுராட்சி சபைகளின் கால எல்லை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, தேர்தல் திருவிழா ஒன்றை சந்திக்கும் சந்தரப்பம் இலங்கை மக்களுக்கிடைக்கும் சாத்தியங்களே உள்ளன.
இதேவேளை இலங்கையில் மிக விரைவாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, மாகாண சபைகளை இயங்க வைப்பதனூடாக மக்கள் தமது அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வழிவகுக்க வேண்டுமென ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெனிவாவுக்கான இந்திய பிரதி நிதி வலியுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)