உர விநியோக ஊழல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மானிய அடிப்படையிலான யூரியா உர விநியோகத்தில் ஊழல், மோசடிகள் நிலவுவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், துரைரெத்தினம், (ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றம்) கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில், வேலியே பயிரை மேயும் வகையில், அரசு சார்ந்த ஒரு சில அரசியல் வாதிகள் கப்பம் பெற்று, மாவட்டத்திற்கு குறைந்த அளவில் மானிய உரத்தை அனுப்பவைத்து உரத்தட்டுப்பாடு ஏற்படும் வகையிலும், வியாபாரிகள் கொள்ளை இலாபமீட்டவும் வழிவகை செய்துள்ளதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைரெத்தினம் இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

அரசுக்குள் நடக்கும் யூரியா உரம் தொடர்பான ஊழலினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் மேட்டு நிலப் பயிர் செய்கை, வேளாண்மைச் செய்கை, செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

இதில் மானிய அடிப்படையில் உரம் வழங்குவதற்காக விவசாயச் செய்கைக்கென ஒரு இலட்சத்தி முப்பத்தையாயிரம் ஏக்கரும், மானியம் அல்லாத அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரும், விவசாயச் செய்கைக்கென பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓன்பதாயிரத்தி ஐநூறு மெற்றிக்தொண்ணுக்கு மேற்பட்ட யூரியா உரம் மாவட்டத்திற்குத் தேவையான நிலையில் மானிய அடிப்படையிலும், ஏனைய மானியம் அல்லாத அடிப்படையிலும் யூரியா உரமும் தேவையாகும். ஆனால், அரசைப் பொறுத்தவரையில் மானிய அடிப்படையிலான உரத்தை குறைந்தளவில் மாவட்டத்திற்கு அனுப்பி உரத் தட்டுப் பாட்டை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, அரசுக்குள் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் கப்பம் பெற்று மாவட்டத்திலுள்ள வியாபாரிகளும் குறிப்பிட்ட இலாபத்தை வைத்து அதிக விலையில் யூரியா உரத்தை விற்பதற்கான முயற்சியில் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் அதிக விளைச்சல் பெறாத விவசாயக்காணி உரிமையாளர்களும், பணம் கொடுத்து வாங்க முடியாத விவசாயிகளும் நேரடியாக இதில் பாதிக்கப்படுவதோடு, வளம் உள்ள விவசாயிகளும் அதிக விலை கொடுத்து உரத்ததைப் பெற்று இலாபம் இல்லாமல் நட்டம் அடையக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசும், வெளிநாடுகளும் விவசாயிகளுக்கென உரத்தைப் பெறுவதற்கு பல கோடிக் கணக்கான நிதிகளை ஓதுக்கீடு செய்து அண்ணளவாக ஐம்பது கிலோ உரத்திற்கு ரூபாய் இருபத்தையாயிரம் பணத்தைக் கொடுத்து உரத்தைப் பெற்று, விவசாயிகளுக்கு ரூபா பத்தாயிரம் மானிய அடிப்படையில் உரத்தை வழங்கி அண்ணளவாக ஒரு மூடைக்கு ரூபாய் பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட நிதியை அரசு மானியமாக வழங்குவதாக பேசப்படுகின்றன.

அப்படி வழங்கப்படுகின்ற உரத்தை அரசுக்குள் இருக்கின்ற ஊழல்வாதிகள் தவறான முறையில் மோசடி செய்து அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்து விவசாயிகளுக்கு பல நட்டத்தை ஏற்படுத்தி குறிப்பாக கடந்த இரண்டு போகங்களிலும் அதிக நட்டத்தை ஏற்படுத்தி இந்தப் போகத்திலும் நட்டத்தை ஏற்படுத்துவதற்காக உர விற்பனையில் மோசடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. வேலியே பயிரை மேய்கின்றளவிற்கு ஊழல்கள் யூரியா உர விற்பனையில் நடைபெற்று வருவதை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியாமலும் நேர்மையான அதிகாரிகளும் கவலையுடன் மௌனம் காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளும், விவசாய நலன் விரும்பிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யூரியா, கிருமி நாசினி தொடர்பாக ஏற்படப் போகும் நட்டத்தைக் குறைப்பதற்கு நடைமுறையிலுள்ள விவசாய அமைப்புக்கள், திட்டமிடல் முகாமைத்துவக் குழு செயற்பாட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் நலன்கள் தொடர்பாக சொந்தப் பணத்தை செலவு செய்து மிக அற்பணிப்புடனும், நேர்மையுடனும் செயற்பட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை அதிகாரிகள், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், எதிர் கட்சி, ஆளும் கட்சி அமைச்சர்கள், வெளிநாட்டத் தூதுவர்கள், பத்திரிகையாளர்கள், ஜனாதிபதி செயலகம் வரையும் கொண்டு சென்று கடினமாக உழைத்தமைக்காக அனைவரின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இப் பிரதிநிதிகள் பெற்ற நிலையில் ஏற்படப் போகும் விவசாய நட்டத்தை எப்படி தடுக்க முடியும். என்பதோடு வேளாண்மைச் செய்கை இந்தப் போகம் செய்கை பண்ணப்படவும் வேண்டும்.

நட்டம் ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளின் நிலை என்ன?

உர விநியோக ஊழல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)