
posted 15th September 2022

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 22 ஆவது வருட நினைவுதின நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (16.09.2022) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் அன்னாரது நினைவேந்தல் நிகழ்வுகள் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச, மாவட்ட மட்டக்கிளைகள் உட்பட அஷ்ரபை நேசிக்கும் பல்வேறு முஸ்லிம் அமைப்புக்களும் நினைவேந்தல் நிகழ்வுகளை நாளை நடத்தவுள்ளன.
இதன்படி மர்ஹும் அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை, மரம் நடுகை, அன்னதானம் வழங்கல் முதலான நினைவேந்தல் நிகழ்வுகள் முஸ்லிம் பிரதேசங்களில் பரவலாக இடம்பெறவுள்ளன.
இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஜினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மர்ஹும் அஷ்ரபின் 22 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு நாளை மாலை அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அக்கரைப்பற்று அய்னாஹ் கடற்கரை மண்டபத்தில், மர்ஹும் எம்.ஐ.எம். முகைதீன் நினைவரங்கில் “தோப்பாகிய தனி மரம்” எனும் தலைப்பில் நிகழ்வு இடம்பெறும்.
இந்த நிகழ்வில் தென்கிழக்கப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, நடிகரும், கவிஞருமான வீ. ஜெயபாலன், முஸ்லிம் காங்கிரஜின் தவிசாளர் “முழக்கம்” ஏ.எல். அப்துல் மஜீத் ஆகியோர் மர்ஹும் அஷ்ரப் தொடர்பான நினைவுப் பேருரைகளை ஆற்றவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)