
posted 21st September 2021
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பலை சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று திிங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக்கும் 27 வயதுக்கும் உள்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப்பொருள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்