
posted 28th September 2021

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வந்த அரச காணியை வெளி மாவட்டத்தவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு பாவனையில் இல்லாதிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் காணியை உடன் ரத்துச் செய்து அப்பகுதியில் விவசாயம் செய்ய காணியற்று இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டுள்ளார்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இலுப்பைக்கடவை சோழமண்டலக் குளத்தின் கீழ் உள்ள சுமார் 250 ஏக்கர் விவசாயக் காணி வெளி மாவட்டத்தவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவை எவ்வித பாவனைகளுக்கும் உட்படாத நிலையில் காணப்பட்டு இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இக் காணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பகுதியிலுள்ள 95 விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே இவ் காணியானது வெளி மாவட்டத்தவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணியற்ற நிலையில் இருப்பதாக அவ் வாழ் மக்களின் விண்ணபத்துக்கு அமைய மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவருமான வீ.எஸ்.சிவகரன் இது தொடர்பாக அண்மையில் காணி அமைச்சரின் கவனத்துக் கொண்டு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் கவனத்துக்கும் இப் பகுதி மக்கள் கொண்டு சென்றிருந்தனர்.
இது தொடர்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் காதர் மஸ்தான் திங்கள் கிழமை (27.09.2021) சம்பவ இடத்துக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜ். வடமாகாண காணி சீர்திருத்த பிரதி ஆணையாளர் விமலன்இ மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எம்.விஜயபாண்டி மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவருமான வீ.எஸ்.சிவகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடும் அப்பகுதி பொது மக்களுடனும் விஐயத்தை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்படி சோழமண்டலகுள அரச காணியானது வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த போதிலும் இ எவ்வித பயண்பாட்டுக்கும் உட்படுத்தாமல் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து குறித்த கிராம மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய
மேற்படி காணியை குத்தகைக்கு எடுத்திருந்த வெளிமாவட்ட குத்தகைக்காரர்களின் குத்தகை ஒப்பந்தத்தை உடனடியாக இரத்துச் செய்து இலுப்பக்கடவை அந்தோனியார் புரத்தில் வதியும் குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் இவ் காணியை விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு நீண்டகால குத்தகைக்கு விடுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ